Home / கட்டுரை / கட்டுரைகள் / கப்ருக்குள் நடக்கும் காட்சிகள்.

கப்ருக்குள் நடக்கும் காட்சிகள்.

_மௌலவி. யூனுஸ் தப்ரீஸ்

I. மலக்கின் விசாரணைகள்:

கப்ருக்குள் ஓர் அடியானை வைத்தவுடன் இரண்டு மலக்குமார்கள் அவரிடம் வருகை தந்து சில கேள்விகளை கேட்பார்கள். என்பதை பின் வரும் ஹதீஸ்களில் காணலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின் , மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்திருப்பேன்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 5503

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் உரையாற்றும் போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள்.
நூல்: புகாரி 1373

1. உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவு அழுவார்கள்.” சொர்க்கம், நரகத்தைப் பற்றி கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை. ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே ஏன்?” என்று அவர்களிடத்தில் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்.
”மண்ணறைதான் மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் ஒருவன் வென்று விட்டால் இதற்குப் பின் உள்ள நிலை இதை விட இலகுவானதாக இருக்கும். இதில் ஒருவன் வெற்றி பெறா விட்டால் இதற்குப் பின் உள்ள நிலைமை இதை விடக் கடுமையானதாக இருக்கும். நான் கண்ட காட்சிகளிலேயே மண்ணறை தான் மிகக் கோரமான இருந்தது ”
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ” எனவே தான் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறேன்” என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹானிஃ (ரஹ்) நூல்: திர்மிதி 2230

2. இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என்று முஹம்மத் நபி (ஸல்) குறித்துக் கேட்பர். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறுவான். அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்…’அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்’ என்றும் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்…

நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் ‘இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என அவனிடம் கேட்கப்படும்போது ‘எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ எனக் கூறுவான். உடனே ‘நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை’ என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.’
அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக்(ரலி). நூல்: புகாரி- 1374-1338

3. மற்றொரு ஹதீஸில் ‘உங்களில் ஒருவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டால் அவரிடம் கரு நிறமான நீல நிறக் கண்களுடைய இரண்டு மலக்குகள் வருவார்கள். அவர்கள் முன்கர் என்றும் நகீர் என்றும் சொல்லப்படுவார்கள்’ அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் குறித்து அவனிடத்தில் ‘இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்’ என்று கேட்பார்கள்.
அவன் (மூமினாக இருந்தால்) ‘அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள்’ என்று கூறுவான். அப்பொழுது அந்த மலக்குள் அவனை நோக்கி நீ இவ்வாறு கூறுவாய் என்பதை ஏற்கெனவே நாம் அறிந்திருந்தோம் என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனுடைய கப்ரு எழுபது முழங்கள் விசாலமாக்கப்படும். பின்னர் அந்த கப்ரு ஒளியேற்றப்பட்டு பிரகாசமாக்கப்படும்.

அவனை நோக்கி ‘நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள். அவனோ அவர்களை நோக்கி என்னுடைய குடும்பத்திடம் நான் சென்று (எனக்குக் கிடைத்துள்ள இந்நற் பாக்கியத்தை) அறிவித்து விட்டு வர என்னை விட்டு விடுங்கள் என்ற கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் ‘மிக விருப்பத்துக்குரிய ஒருவரேயன்றி வேறெவரும் எழுப்பாதளவுள்ள மணமகனின் உறக்கமாக நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள். அன்றுமுதல் மறுமை நாள் வரை அவன் உறங்கிக் கொண்டே இருப்பான்.

முனாபிக் ஒருவனிடம் கேள்வி கேட்கும் போது, ‘மக்கள் ஏதேதோ சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் (இப்பொழுது எதுவும்) எனக்குத் தெரியாது’ என்று கூறுவான். அபபொழுது அந்த மலக்குகள் அவனை நோக்கி ‘நீ இவ்வாறே பதிலளிப்பாய் என்பதை ஏற்கனவே நாம் அறிந்து வைத்திருந்தோம்’ என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனை நெருக்குமாறு பூமிக்கு உத்தரவிடப்படும். அவனுடைய (வலது இடது) விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ளுமளவு அவனை நெருக்கும். அவனை அந்த இடத்திலிருந்து அல்லாஹ் எழுப்புகின்ற நாள்வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி ), நூல்: திர்மிதி

4. நபித் தோழரை நெருக்கிய கப்ரு …?

கப்ரு என்பது எந்த ஒரு மனிதனையும் இலகுவாக விட்டுவிடாது. அல்லாஹ்வுடைய உத்தரவுப்படி வேதனைகளை அது அளிக்காமல் விட்டு விடாது. கப்ரில் ஒருவனுக்கு மீட்சி கிடைத்து விட்டால் அவனுக்கு மறுமையில் மீட்சி கிடைத்தது போன்றதாகும். நபித் தோழர்களில் நபியவர்களுக்கு மிக விருப்பத்துக்குரிய ஒரு தோழரான ஸஃது (ரலி) அவர்களின் ஸக்ராத்துடைய நிலை நமக்குப் படிப்பினையூட்டக் கூடியதாய் அமைந்துள்ளது.

ஸஃது (ரலி) அவர்கள் அகழ்யுத்தத்தின் போது கடுமையாகக் காயமுற்று நோயுற்றிருந்தார்கள். அவருடைய வீடு சற்று தூரத்திலிருந்ததால் அடிக்கடி அவரை நோய் விசாரிக்கச் செல்ல நபி (ஸல்) அவர்களுக்கு சிரமமாயிருந்தது அடிக்கடி சென்று அவரைப் பார்ப்பதற்காக, அவருக்கென்று மஸ்ஜிதுந் நபவிக்கு அருகில் வீடொன்று அமைத்துக் கொடுக்குமாறு நபியவர்கள் தமது தோழர்களைப் பணித்தார்கள். அவ்விதம் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அதன் பின்னால் நபியவர்கள் அடிக்கடி அவரைப் பார்த்து வந்தார்கள். ஒரு நாள் இரவு நடு நிசியில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘வானத்திலும் பூமியிலும் உள்ளவர்களைக் கவலையடையச் செய்யக் கூடியதாக ஒருவர் மரணித்து விட்டார். அதனையிட்டு அல்லாஹ்வுடைய அர்ஷ்க்கூட நடுங்குகிறது’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். உடனே நபி (ஸல் ) அவர்கள் ஸஃது (ரலி) அவர்களிடம் சென்று பார்த்த போது அவர் இறந்திருக்கக் கண்டார்கள்.

மறுநாள் அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டு, கப்ரினுள் வைக்கப்படுவதைப் பார்த்து கொண்டிருந்த நபியவர்கள் திடீரென ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றார்கள். நபித்தோழர்களும் ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றனர். சற்று நேரத்தில் ‘அல்லாஹுஅக்பர்’ என்று நபியவர்கள் கூறினார்கள். நபித் தோழர்களும் அவ்விதமே கூறினார்கள். இவ்விருவார்தைகளாலும் ஆச்சிரியமடைந்த நபித் தோழர்கள் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டு முடிந்ததும் ‘யாரஸுலுல்லாஹ்’ வழக்கத்துக்கு மாறாக இன்று கவலையுடன் ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றும், மீண்டும் சந்தோஷத்துடன் ‘அல்லாஹுஅக்பர்’ என்று கூறினீர்கள் இதன் காரணம் என்ன? என்று கேட்டார்கள்.

அப்பொழுது நபிவர்கள் ‘ஸஃது (ரலி) கப்ரினுள் வைக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, கப்ரு அவரை நெருக்குவதைக் கண்ணுற்றேன். அப்பொழுது கவலையுடன் ஸுப்ஹானல்லாஹ் என்றேன். அதனைத் தொடர்ந்து கப்ரு அவரை நெருங்குவதை விட்டு அவருக்கு இடம் கொடுத்தது. அப்பொழுது அல்லாஹுஅக்பர்’ என்றேன் என்று கூறிவிட்டு ஒவ்வொரு கப்ரும் ஒவ்வொரு மனிதனையும் நெருக்காமல் விட்டு விடாது அதிலிருந்து ஒருவர் மீட்சி பெற முடியுமென்றிருந்தால் ஸஃது மீட்சி பெற்றிருப்பார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி ), நூல்: அஹமது, நஸாயீ

‘நிச்சயமாக ஒவ்வொரு கப்ரும் நெருக்கக் கூடியதாய் இருக்கின்றது. அதிலிருந்து ஒருவன் மீட்சி பெறமுடியும் என்றிருந்தால் ஸஃது மீட்சி பெற்றிருப்பார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி ), நூல்: அஹமத்

கப்ரில் வைக்கப்பட்டவர் நல்லடியாராக இருந்தால் கப்ருடைய வாழ்க்கை மறுமை நாள் வரை சந்தோசமாக இருக்கும். அதே நேரம் பாவியாக இருந்தால் மறுமை நாள் வரை பல பயங்கரமான தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருப்பான் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்

வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இருவருடைய கப்ருகளைத் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்ற போது, ‘இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்’ எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரண்டு கப்ருகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?’ என்று கேட்டதும், ‘இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்’ என்று இறைத்தூதர் நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 1361

II. கப்ருக்குள் நரகம், சுவனம், காட்டப்படல்:

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கப்ரில் ஒரு இறைநம்பிக்கையாளர் எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம், இரண்டு வானவர்களைக் கொண்டு கேள்வி கேட்கப்படும், அதற்க்கு (அவர்களிடம்) அந்த இறைநம்பிக்கையாளர், “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அவனுடைய தூதராவார்கள்” என சாட்சி கூறுவார். இதையே அல்லாஹ் ‘நம்பிக்கை கொள்கிறவர்களை இவ்வுலக சொல்லைக் கொண்டு
அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்’. (திருக்குர்ஆன்14:27).

எனக் குறிப்பிடுகிறான், என்று பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

இந்த வசனம் மண்ணறை வேதனை சம்பந்தமாகவே அருளப்பட்டது என ஷுஅபாவின் அறிவிப்பில் காணப்படுகிறது.

நூல்: புகாரி- 1369

மேலும் “இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்.) மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிற வரை இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி ), நூல்: புகாரி- 1379

நல்லடியார் என்றால் மறுமைக்காக எழுப்பப் படுகின்ற வரை காலையிலும், மாலையிலும் சுவனத்தை எடுத்துக் காட்டி அந்த அடியானை அல்லாஹ் சந்தோசப்படுத்துவான். அதே நேரம் பாவியாக இருந்தால் மறுமைக்காக எழுப்பப் படுகின்ற வரை நரகத்தை எடுத்துக் காட்டி அவனுக்கு மேலும், மேலும் பயத்தையும், தண்டனையையும் அல்லாஹ் கொடுத்துக் கொண்டே இருப்பான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்.
“அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரி வமின் ஃபித்ன(த்)தில் மஹ்யா வல் மமாதி, வமின் ஷர்ரி ஃபித்ன (த்)தில் மஸீஹித் தஜ்ஜால்”

பொருள்: இறைவா! நான் உன்னிடம் நரகத்தின் வேதனையிலிருந்தும், கப்ரின் வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுகிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 924.

கப்ரின் வேதனையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக…

Check Also

முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும் ?

முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும் ? தொகுப்பு : யாஸிர் ஃபிர்தௌசி அழைப்பாளர் அல்- ஜுபைல் தஃவா நிலையம், …

Leave a Reply