கேள்வி எண்: 37.
இஸ்லாத்தின் கருத்துப்படி உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டிருக்கிறார்கள். அப்படியெனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்?. ராமரையும், கிருஷ்ணரையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களாக எடுத்துக்கொள்ளலாமா?.
பதில்:
1. ஒவ்வொரு நாட்டிற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்:
அருள்மறை குர்ஆனின் 35வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபா(த்)திரின் 24வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகிறது:
“..அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை..(Al Quran – 35:24),
அருள்மறை குர்ஆனின் 13வது அத்தியாயம் ஸுரத்துல் ரஃதுவின் 07வது வசனமும் கீழ்கண்டவாறு கூறுகிறது:
..மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டி உண்டு.. (Al Quran –13:7),
2. ஒரு சில இறைத்தூதர்களின் வரலாறு மாத்திரம் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது:
அ. அருள்மறை குர்ஆனின் 4வது அத்தியாயம் ஸுரத்துன்னிஷாவின் 164வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்: இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்: ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை.” (Al Quran – 4:164)
ஆ. அருள்மறை குர்ஆனின் 40வது அத்தியாயம் ஸுரத்துல் முஃமின் – னின் 78வது வசனமும் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்: இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்..(Al Quran – 40:78),
3. இருபத்து ஐந்து இறைத்தூதர்கள் பெயர்கள் மாத்திரம் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது:
நபி முஹம்மது (ஸல்), நபி ஆதம் (அலை), நபி நூஹ் (அலை), நபி இபுறாஹிம் (அலை), நபி மூஸா (அலை), நபி ஈஸா (அலை) ஆகிய இறைத்தூதர்களின் பெயர்கள் உட்பட இருபத்து ஐந்து இறைத்தூதர்களின் பெயர்கள் மாத்திரம் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4. ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் இறைத்தூதர்கள்:
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கூற்றுப்படி இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட மொத்த இறைத்தூதர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் ஆகும்.(1,24,000)
5. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும், அவர்களின் காலத்தில் உள்ள மக்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் ஆவார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும், அவர்களின் காலத்தில் உள்ள மக்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் ஆவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரம் பின்பற்றப் படக்கூடியவர்களாக அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.
அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல இம்ரானின்
49வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
“..இஸ்ராயீலின் சந்ததியினருக்கு தூதராகவும் அவரை ஆக்குவான்.. (Al Quran – 3:49),
6. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இறுதியான இறைத்தூதர்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இறுதியான இறைத்தூதர் ஆவார்கள். இது பற்றி அருள்மறை குர்ஆனின் 33வது அத்தியாயம் ஸுரத்துல் அஹ்ஜாப் – ன் 40வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
‘முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக
இருக்கவில்லை. ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும்,
நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்: மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.” (Al Quran – 33:40),
7. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முழு மனித சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்ட இறைத்தூதர்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் என்பதால், அவர்கள் இஸ்லாமிய சமுதாயத்திற்கு மாத்திரமோ அல்லது அரேபியர்களுக்கு மாத்திரமோ அனுப்பட்ட இறைத்தூதர் அல்ல. முழு மனித சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்ட இறைத்தூதர். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முழு மனித சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்ட இறைத்தூதர் ஆவார்கள். இது பற்றி அருள்மறை குர்ஆனின் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியாவின் 107வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
“(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ‘ரஹ்மத்”தாக அருட்கொடையாக வேயன்றி அனுப்பவில்லை.” (Al Quran – 21:107),
மேற்படி போன்ற செய்தி அருள்மறை குர்ஆனின் 34வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸபாவின் 28 வசனத்தின் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாறாயங்
கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாறும்) அனுப்பவில்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்.” (Al Quran – 34:28)
“ஒவ்வொரு இறைத்தூதரும் அவர்களுடைய சமுதாயத்திற்கு மாத்திரம் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான் முழு மனித சமுதாயத்திற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டிருக்கிறேன்,” என்கிற செய்தியை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக ஜாபிர்
பின் அப்துல்லா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மேற்படி செய்தி ஸஹீ ஹுல் புஹாரி என்னும் ஹதீஸ் புத்தகத்தின் – முதலாம் பாகத்தில் – 56வது அத்தியாயமான தொழுகை என்னும் தலைப்பின் கீழ் 429 வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆ. இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்?.
இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்?. ராமரையும், கிருஷ்ணரையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களாக எடுத்துக்கொள்ளலாமா?. என்கிற கேள்வியை எடுத்துக் கொண்டால் – இந்தியாவுக்கு என்று அனுப்பப்பட்ட இறைத்தூதர் பற்றி அருள்மறை குர்ஆனிலோ, அல்லது நபி (ஸல்) அவர்களின் அறிவிப்புகளிலோ சொல்லப்படவில்லை. ராமருடைய பெயரும், கிருஷ்ணருடைய பெயரும் – குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ எங்குமே குறிப்பிடப் படவில்லை
என்பதால் – அவர்கள் இறைத்தூதர்களா?. இல்லையா என்பதை பற்றி யாரும் நிச்சயமாக சொல்ல முடியாது. சில இஸ்லாமியர்கள் – குறிப்பாக சில இஸ்லாமிய அரசியல்வாதிகள் இந்துக்களை திருப்திபடுத்த வேண்டி ராம் (அலை) என்று (அல்லாஹ் – ராமர் மீது அருள் புரியட்டும்) என்று சொல்கிறார்கள். இது முற்றிலும் தவறாகும். ராமர் இறைத்தூதர் என்பதற்கு அருள்மறை குர்ஆனிலிருந்தோ அல்லது ஹதீஸிலிருந்தோ சரியான ஆதாரம் எதுவும் இல்லை. ஒருவேளை அவர்கள் இறைத்தூதராக இருக்கலாம் என்று யாராவது ஒருவர் சொன்னாலும், சொல்லலாம்.
9. ராமரும், கிருஷ்ணரும் இறைத்தூதராக இருந்திருந்தால் கூட, இன்றைக்கு நாம் இறைத்தூதராக ஏற்று பின்பற்றி நடக்கக் கூடியவர் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தான்.
ராமரும், கிருஷ்ணரும் இறைத்தூதராக இருந்திருந்தால், அவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் உள்ளவர்கள் மாத்திரம்தான், அவர்களை தூதர்களாக எண்ணி பின்பற்றி இருக்க வேண்டும்.
ஆனால் இன்று, இந்தியாவில் உள்ளவர்கள் உட்பட உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் இறைவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களைத்தான் தூதராக ஏற்று நடக்க வேண்டும்.