بسم الله الرحمن الرحيم
5. பொறாமை
பொறாமையானது ஒரு சோதனையாகும். சிலர், சத்தியம் குறித்த நபரிடமிருந்து வரும் போது அதனைக் காரணம் காட்டி ஏற்க மறுக்கின்றனர். இதன் காரணமாகவே மதீனாவில் காணப்பட்ட யூதர்களும் நயவஞ்சகர்களும் சத்தியத்தைக் கொண்டு வந்த அல்லாஹ்வின் தூதரை ஏற்க மறுத்தனர். இது குறித்து அல்லாஹுத்தஆலா பிரஸ்தாபிக்கும் போது:
“வேதம் கொடுக்கப்பட்டோரில் அதிகமானோர் அவர்களிடம் காணப்பட்ட பொறாமையின் காரணமாக அவர்களுக்கு சத்தியம் தெளிவான பின்னரும் நீங்கள் விசுவாசம் கொண்ட பிறகு நிராகரிப்போராகத் திரும்பிவிட வேண்டும் என்று அசைப்படுகின்றனர்”. (அல்பகரா: 109)
6. மார்க்கத்தில் எல்லை மீறிச் செல்லல்.
மார்க்கத்தில் எல்லை மீறிச் செயற்படுவதும் சத்தியம் எங்களை விட்டும் தடைப்படுவதற்குக் காரணமாக அமைகின்றது. அதனால் தான் அவ்வாறு எல்லை மீறிச் செல்ல வேண்டாம் என்று வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
நபியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக இந்த மார்க்கம் இலகுவானது. எவரொருவர் இந்த மார்க்கத்தில் எல்லை மீறிச் சென்று அதனை கடினமானதாக ஆக்கிக் கொள்கிறாரோ அவரை அது மிகைத்துவிடும்”. (புகாரி: 39)
மேலும் நபியவர்கள் கூறினார்கள்: “எல்லை மீறிச் செல்பவர்கள் அழிந்து விட்டார்கள்!” (முஸ்லிம்)
7. தற்பெருமை கொள்ளல்
தற்பெருமை கொள்வது பலவகையான நன்மைகள் கைகூடுவதை விட்டும் தடுக்கக்கூடியதாக உள்ளது. அந்தவிதத்தில் சத்தியத்துடைய விடயத்தில் ஒருவர் அதனை மனதார ஏற்காமல், புரக்கணித்து நடப்பாரென்றால் அதன் காரணமாக அவரைவிட்டும் சத்தியம் வெகு தூரப்பட்டு சென்றுவிடுகின்றது.
உண்மையில், சத்தியத்தைப் புரக்கணிப்பதையும் மனிதர்களை அற்பமாகக் கருதுவதையுமே பெருமைக்கு வரைவிலக்கணமாகக் கூறப்படுகின்றது. இப்படியான பெருமையானது ஒருவரை இறுதி மூச்சு வரை சத்தியத்தை அனுக முடியாத அளவுக்கு தள்ளிவிடும். நபியவர்கள் ஒரு மனிதரைப் பார்த்து: “நீ உனது வலக்கரத்தால் சாப்பிடு!” என்று கூறிய போது, “என்னால் முடியாது” என்று அவர் கூறிவிட்டார். அப்போது நபியவர்கள் அந்நபரை நோக்கி: “உன்னால் முடியாமல் போகட்டும்!” என்றார்கள். அம்மனிதருக்கு இறுதிவரை தனது கையை வாயின் பக்கம் உயர்த்த முடியாமல் போனது என்று அச்செய்தியில் பதிவாகியுள்ளது. (முஸ்லிம்)
8. தனது பதவி பறிபோகக்கூடாது என்ற நோக்கில் செயற்படல்.
இப்படியான நோக்கில் செயற்படுபவரும் சத்தியத்தைவிட்டும் தூரப்படுத்தப்படுவார். ஏனெனில், இத்தகையவர்களின் முழு நோக்கமும் தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதாகும். அதற்காக வேண்டி இத்தகையவர்கள் மார்க்கத்தைக் கூட உதாசீனம் செய்யக்கூடிய நிலையைப் அவதானித்து வருகின்றோம். வரலாற்றில் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி ஸலூலைப் பாருங்கள்! அவன் முனாபிக்களின் தலைவனாகக் காணப்பட்டான். தான் எதிர்பார்த்த பதவி தன்னை விட்டும் கைநழுவிப் போனதை அறிந்த போது, அதனை நோக்காகக் கொண்டு சத்தியம் வந்தபோதும் அதற்கு எதிரியாகச் செயற்பட்டான். இந்நிலைதான் பட்டம் பதவிக்கு முதலிடம் கொடுக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் உண்டாகும்.
9. சத்தியத்தை குறிப்பிட்ட ஓர் அழைப்பாளனுடன் சுருக்கிக் கொள்வது.
சத்தியமானது, குறிப்பிட்ட ஓர் அழைப்பாளனுடன் மாத்திரம் சுருங்கிக் கொண்ட ஒன்றல்ல! மாறாக, அல்லாஹுத்தஆலா காலத்துக்குக் காலம் இச்சத்தியத்தைத் தெளிவுபடுத்துவதற்காக பல அழைப்பாளர்களை ஏற்படுத்தி வைத்திருக்கின்றான். நபியவர்களுக்குப் பின்னுள்ள இஸ்லாத்தினுடைய வரலாற்றைப் பார்க்கும் போது இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளலாம். இப்படியிருக்க, சிலர் சத்தியத்தைப் புரக்கணிக்கின்றனர். காரணம், அச்சத்தியமானது தனக்குப் பிடிக்காத நபரால் சொல்லப்பட்டது என்பதற்காக! உண்மையில், இத்தகையவர்களின் எதிர்பார்ப்பு சத்தியமானது ஒரு குறிப்பிட்ட அழைப்பாளனினால் அல்லது ஒரு கூட்டத்தினால் அல்லது ஒரு பிரிவினால் சொல்லப்பட வேண்டும் என்பதாகும். இப்படியான நிலைப்பாடு அவரை அறியாமலே சத்தியத்தை விட்டும் தூரமாக்கி விடும்!
இவை தவிர்ந்த இன்னும் சில காரணங்கள் உள்ளன. அவற்றை சுருக்கமாகத் தருகின்றேன்.
- நேர்வழியை கேட்டுத் தெரிந்து கொள்வதில் உள்ள பொடுபோக்கான நிலை.
- அல்லாஹ்வைப் பற்றிய அச்ச உணர்வு இல்லாமை.
- அசத்தியத்தில் உள்ளவர்களுடனான தொடர்பு.
- தன்னோடு முரண்பட்டவர்களின் கருத்துக்களை அலசி ஆராயாமை.
- வழிகேட்டில் உள்ளவர்களைப் பற்றியும் வழிகேடான அம்சங்கள் பற்றியும் காணப்படுகின்ற அறிவின்மை.
இப்படிப் பல காரணங்கள் உள்ளன. இவற்றை நல்ல முறையில் விளங்கி, சத்தியத்தை நேசிக்கக்கூடிய நன்மக்களாகவும் அதனை தேடிப் பின்பற்றக்கூடியவர்களாகவும் அல்லாஹுத்தஆலா எம்மையும் உங்களை ஆக்கி அருள்பாளிப்பானாக!
– அபூ ஹுனைப் ஹிஷாம் (ஸலபி, மதனி)