Home / Islamic Months / Ramadan / Fasting / நோன்பின் மகத்துவம். | கட்டுரை – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

நோன்பின் மகத்துவம். | கட்டுரை – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

இஸ்லாம் போதிக்கும் அடிப்படையான இபாதத்துக்களில் நோன்பும் ஒன்றாகும். ரமழான் மாதத்தில் நோன்பிருப்பது இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும். நோன்பின் மாண்புகளையும் மகத்துவங்களையும் புரிந்து கொள்ள இஸ்லாம் அதற்கு வழங்கியுள்ள சிறப்புக்களை அறிந்து கொள்வது முக்கியமாகும்.

ஆரம்ப காலங்களில் குடும்பத்தில் மூத்தவர்கள் அனைவரும் நோன்பிருப்பதால் சிறுவர்களும் நோன்பு நோற்று வந்தனர். இதனால் நோன்பு என்பது அனைவராலும் கடைப்பிடிக்கப் படும் ஒரு இபாதத்தாக இருந்தது. இந்த நிலை இப்போது குறைந்து வருகின்றது. வளர்ந்தவர்களில் பலரும் தொழிலைக் காரணம் காட்டி நோன்பு நோற்பதைத் தவிர்த்து வருகின்றனர். இளம் சந்ததிகளிடமும் இந்தப் போக்கு வளர ஆரம்பித்துள்ளது. முன்பெல்லாம் தொழாதவர்கள் கூட நோன்பை விடாத அளவுக்கு வாழையடி வாழையாக வந்த வழிபாட்டு முறை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிப்பது ஆபத்தான அறிகுறியாகும். எனவே, இது குறித்து விழிப்புணர்வூட்டுவது அவசியமாகும்.

1. இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று:

நோன்பு என்பது இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றாகும். இது இல்லாமல் இஸ்லாம் எனும் கட்டிடத்தைக் கட்டியெழுப்ப முடியாது. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்பதை ஏற்காதவர் முஸ்லிமாக முடியாது.

”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது”” என்று இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர் (ர) அறிவித்தார்.
(புஹாரி: 8)

2. நோன்பு ஈமானின் அடையாளம்:

ஒருவர் நோன்பை முறையாக நோற்கின்றார் என்றால் அது அவரின் ஈமானின் அடையாளமாக இருக்கின்றது. இதனால்தான் நோன்புடன் தொடர்புபட்ட பல ஹதீஸ்களில் ‘ஈமான், ‘இஹ்திஸாப்” என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என அபூஹுரைரா(ர) அறிவித்தார்.
(புஹாரி: 1901, 35, 37, 38,)

யார் ரமழானில் ஈமானுடன் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவரது பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற ஹதீஸ் நோன்பாளியின் ஈமானையும் இஹ்லாஸையும் சம்பந்தப்படுத்துகின்றது.

3. நோன்பு அல்லாஹ்வுக்குரியது:

இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ”நோன்பு எனக்குரியது. நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும், பானத்தையும் எனக்காகவே விட்டு விடுகிறார்’ என்று அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு ஒரு கேடயமாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும், மறுமையில் தம் இறைவனை அவர் சந்திக்கும் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும்தான் அவை. நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையைவிட அல்லாஹ்விடம் மணம் மிக்கதாகும்” என அபூஹுரைரா(ர) அறிவித்தார்.
(புஹாரி: 7492)

நோன்பு எனக்குரியது என அல்லாஹ் கூறுகின்றான். எல்லா நல்லறங்களும் அல்லாஹ்வுக்குரியதே! அப்படியிருக்கும் போது நோன்பை மட்டும் ஏன் அல்லாஹ் இப்படிக் குறிப்பிட்டுக் கூற வேண்டும் என்ற கேள்வி எழலாம்.

ஒருவர் நோன்பை உண்மையாக நோற்கின்றார் என்றால் அதை அவர் அல்லாஹ்வுக்காகவே செய்கின்றார். ஏனெனில், நோன்பு என்பது தொழுகை, ஸகாத், ஹஜ் போன்ற கூட்டுக் கடமையல்ல தனித்துச் செய்யப்படும் ஒரு இபாதத் ஆகும். ஒருவர் தனிமையில் சாப்பிட நினைத்தால் சாப்பிட்டு விடலாம். ஆனால், அவர் சாப்பிடாமல் இருக்கின்றார் என்றால் அது அல்லாஹ் ஒருவனுக்காக மட்டுமேயாகும். இதனால்தான் ‘அவன் தனது உணவையும், பானத்தையும், இச்சையையும் எனக்காக விடுகின்றான்” என்று கூறப்படுகின்றது.

4. அளவில்லாக் கூலி:

அடுத்து, எல்லா அமல்களுக்கும் அல்லாஹ்தான் கூலி கொடுக்கின்றான். அப்படியிருக்கும் போது நோன்பைப் பற்றி மட்டும் ஏன் ‘நானே அதற்குக் கூலி கொடுக்கின்றேன்” என்று அல்லாஹ் கூறுகின்றான் என்ற சந்தேகமும் எழலாம்.

எல்லா நல்லறங்களுக்கும் அல்லாஹ்வே கூலி கொடுக்கின்றான். அந்தக் கூலியை எத்தனை மடங்காகப் பெருக்கிக் கொடுக்க வேண்டும் என்ற அளவு உண்டு. ஆனால், நோன்புக்கு அந்த அளவு எல்லை என்பதெல்லாம் கிடையாது. அல்லாஹ்வே அவன் நினைக்கும் அளவு கணக்கின்றி வழங்குகின்றான். அதனால்தான் அதற்கு நானே கூலி வழங்குகின்றேன் என்று இங்கே கூறப்படுகின்றது.

5. நோன்பு கேடயமாகும்:

நபி(ச) அவர்கள் நோன்பு ஒரு கேடயமாகும் என்று கூறியுள்ளார்கள். எதிரிகளின் ஆயுத வீச்சிலிருந்து எம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே கேடயம் பயன்படுத்தப்படும். நோன்பு என்பது வீணான இச்சைகளில் இருந்தும் ஷைத்தானின் தாக்குதலிலிருந்தும், மறுமையில் நரகத்திலிருந்தும் பாதுகாக்கும் கேடயமாக அமைந்துள்ளது. இந்தக் கேடயம் எமக்கு அவசியமானதல்லவா?

6. கற்பைக் காக்கும், பார்வையைத் தாழ்த்தும்:

நோன்பு கற்பைக் காக்கும். பார்வையைத் தாழ்த்தச் செய்யும், வீணான உணர்வுகளைக் கட்டுப்படுத்தும், பக்குவத்தைத் தரும், வேண்டிய பொருட்களையும் ஒதுக்கி வாழ பயிற்சியைத் தரும். இதனால்தான் நபி(ச) அவர்கள் இப்படிக் கூறினார்கள்.

”இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும், கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று கூறினார;கள். (புஹாரி: 5066)

7. நோன்பு சுயகட்டுப்பாட்டைத் தரும்:

நோன்பு சுயகட்டுப்பாட்டை வளர்க்கின்றது. ஆசை இருந்தும், தேவை இருந்தும் உணவு மற்றும் பானம் இருந்தும் அவற்றை உண்ணாமல், பருகாமல் மனதைக் கட்டுப்படுத்தி பக்குவப்படுத்துகின்றது நோன்பு! இவ்வாறே கோபத்தைக் கட்டுப்படுத்தி பொறுமையைப் போதிக்கின்றது. நோன்பு நாவையும், தேவையற்ற போக்குகளிலிருந்தும் தவிர்ந்திருக்கச் செய்து அதையும் கட்டுப்படுத்துகின்றது. இவ்வாறு உள்ளத்தையும் உடலையும் கட்டுப்படுத்தி பக்குவமாக வாழ நோன்பு பயிற்சியளிக்கின்றது.

இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ”நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம்! முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!” என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட நறுமணம்மிக்கதாகும்! (மேலும்) ‘எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!” (என்று அல்லாஹ் கூறினான்)”” என அபூஹுரைரா(ர) அறிவித்தார். (புஹாரி: 1894)

தேவையற்ற பேச்சுக்களை, ஆபாச செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் யாராவது வம்புக்கு வந்தால் கூட அவர்களுடன் சண்டைக்குச் செல்லாது ஒதுங்கிவிட வேண்டும் எனவும் இந்த நபிமொழி போதிக்கின்றது.

‘இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ”பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கை களையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என அபூஹுரைரா(ர) அறிவித்தார்.
புஹாரி: 1903)

வெறுமனே பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மட்டுமன்றி நோன்பு என்பது பொய் பேசுவது மற்றும் அதனுடன் தொடர்பான செயற்பாடுகள் என்பனவற்றைத் தவிர்ப்பதுதான் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.

எனவே, உண்மையான, முறையான நோன்பு என்பது சுயகட்டுப்பாட்டை வளர்க்கின்றது எனலாம்.

8. சுவனத்திற்குத் தனி வழி:

சுவனத்திற்குப் பல வாயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ‘ரையான்” என்பதாகும். நோன்பாளிகள் விஷேடமாக அந்த வாயில் வழியாக சுவனம் நுழையும் பாக்கியத்தைப் பெறுவார்கள்.

இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘சொர்க்கத்தில் ‘ரய்யான்” என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?” என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!” என ஸஹ்ல்(ர) அறிவித்தார். ” (புஹாரி: 1896)

சுவனமும் கிடைக்கும், தனி வழியாகச் செல்லும் உயர்ந்த பாக்கியமும் கிடைக்கும் எனக் கூறி நோன்பின் மகத்துவத்தை இந்த ஹதீஸ் உயர்த்திக் காட்டுகின்றது.

9. வாயின் வாடையும் கஸ்தூரி மணமாகும்:

நோன்பாளி நோன்புடன் இருக்கும் போது வாயில் துர்வாடை ஏற்படும். இந்தத் துர்வாடை கூட அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட நறுமணம் கூடியது என ஹதீஸ்கள் கூறி நோன்பாளியின் அந்தஸ்தை உயர்த்திக் காட்டுகின்றது.

இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘…. முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சி யடைகிறான்.” என அபூஹுரைரா(ர) அறிவித்தார். ”
(புஹாரி: 1904)

நோன்பாளியின் மகிழ்ச்சிகள்:

நோன்பாளிக்கு இரண்டுவிதமான மகிழ்ச்சிகள் இருப்பதாக ஹதீஸ்கள் கூறுகின்றன.

1. நோன்பு திறக்கும் போது இயல்பாக ஏற்படும் மகிழ்ச்சி.

2. நாளை மறுமையில் அல்லாஹ்வைச் சந்திக்கும் போது தான் நோற்ற நோன்பினால் கிடைக்கும் பெறுபேறுகளைப் பார்த்து மீண்டும் ஒரு முறை மகிழ்வடைவான் என ஹதீஸ்கள் கூறுகின்றன.

இந்த மறுமை மகிழ்வுக்கு நோன்பு காரணமாக அமையும் என்பது நோன்பின் மகத்துவத்தை உணர்த்துகின்றது.

10. நோன்பும் துஆவும்:

நோன்பாளியின் துஆ விஷேடமாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும். அல்குர்ஆனிலும் நோன்பு பற்றி கூறிய பின்னர் துஆ பற்றிக் கூறப்படுவதைக் கவனியுங்கள்.

‘ரமழான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியைத் தெளிவுபடுத்தக் கூடியதாகவும், (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக் கூடியதாகவுமுள்ள அல்குர்ஆன் இறக்கி வைக்கப் பட்டது. எனவே, உங்களில் யார் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். யார் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கின்றாரோ (அவர்) வேறு நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளட்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தை விரும்பவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகவும், அல்லாஹ் உங்களை நேர்வழியில் செலுத்தியதற்காக அவனைப் பெருமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற் காகவும் (இவ்வாறு செய்தான்.)”

‘(நபியே!) என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் அருகிலேயே இருக்கின்றேன். (எனக் கூறுவீராக!) பிரார்த்திப்பவன் என்னை அழைத்தால், அழைப்புக்கு விடையளிப்பேன். எனவே, அவர்கள் நேர்வழி பெறும் பொருட்டு என்னையே அழைக்கட்டும். மேலும், என்னையே நம்பிக்கை கொள்ளட்டும்.” (2:185-186)

‘நோன்பாளி நோன்பு திறக்கும் போது மறுக்கப்படாத ஒரு துஆ அவருக்குண்டு” என நபி(ச) அவர்கள் கூறியதாக அம்ர் இப்னு ஆஸ்(ர) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (இப்னு மாஜா: 1753)

இவ்வாறு பல்வேறுபட்ட கோணங்களில் நோக்கும் போது நோன்பின் மாண்பு பளிச்செனத் தெரியவரும்.

எனவே, புனித ரமழானில் நாமும் நோன்பு நோற்பதுடன் எமது குடும்பத்தில் உள்ள அனைவரையும் நோற்கச் செய்து அதன் பாக்கியங்களை முழுமையாகப் பெற்றுக் கொள்ள முயல்வோமாக!

Check Also

நூல் முஹ்தஸர் ஃபிக்ஹுஸ் ஸவ்ம் – பாகம் 04

உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி நூலாசிரியர்: அஷ்ஷைக் அலவி இப்னு அப்துல் காதர் அஸ்ஸக்காஃப் ஹஃபிழஹுல்லாஹ் Subscribe to …

One comment

  1. Assalamu alaikum
    Melei sonnadhai polevei
    Vaazhai adi vazhaiyaage irundhe indhe nonbu norkum pazhakkam
    Tharpoadhu
    Thozhilai karanam kaati
    Padikkum pullahalahe irundhal tution vahuppai kaarenam kaati
    Ippodhu maatrapattu varudiredhu..
    Petroagalei than pillahalai indhe varudem nonbu vaikke vendam
    Aduthe varudem paarthu kollalamnu solluvadhai ennavendru sollvadhu!!! Allahu akbar

Leave a Reply