Home / கட்டுரை / கட்டுரைகள் / முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா?கட்டுரை| ஆசிரியர் : மௌலவி அப்பாஸ் அலி MISC

முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா?கட்டுரை| ஆசிரியர் : மௌலவி அப்பாஸ் அலி MISC

بسم الله الرحمن الرحيم
(Download PDF) முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா?

முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா?

இணைவைத்தல் கொலை செய்தல் தற்கொலை செய்தல் வட்டி வாங்குதல் விபச்சாரம் புரிதல் மது குடித்தல் மற்றும் பல்வேறு தீமையான காரியங்களை அல்லாஹ் தடைசெய்துள்ளான்.

அடியான் உலகில் வாழும்போதே தான் செய்த பாவத்திலிருந்து விலகி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் இணைவைப்பு உட்பட அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடுகிறான். ஆனால் பாவத்திலிருந்து விடுபடாமலும் மனம் திருந்தாமலும் மரணித்தால் அவனை மன்னிப்பதும் மன்னிக்காமல் தண்டிப்பதும் இறைவனுடைய தனிப்பட்ட விருப்பமாகும்.

அல்லாஹ்வுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியான இணைவைப்பை செய்தவர் அதிலிருந்து மீளாமல் அதேக் கொள்கையில் மரணித்தால் அவனை இறைவன் மன்னிக்கவேமாட்டான். அவன் நரகில் என்றென்றும் நிரந்தரமாக கிடப்பான்.

இணைவைப்பு அல்லாத வேறு பெரும்பாவங்களை செய்தவர் பாவமன்னிப்புத் தேடாமல் மரணித்தால் அல்லாஹ் நாடினால் அவரை அவன் மன்னிக்கலாம். அவன் நாடினால் சிறிது காலம் நரகில் தண்டிக்கலாம். அவர் அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல் அவனை மட்டும் வணங்கியதற்காக மறுபடியும் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை வழங்குவான்.
இணைவைப்பு அல்லாத பாவங்கள் எதுவானாலும் அப்பாவத்தில் அல்லாஹ் இவ்வாறே நடந்துகொள்கிறான்.

எனவே இந்த அடிப்படையில் ஒரு முஸ்லிம் வட்டி விபச்சாரம் மது கொலை கொள்ளை தற்கொலை போன்ற எந்த பாவத்தை செய்தாலும் இதற்கு அல்லாஹ் அவனுக்கு நிரந்தர நரகத்தை வழங்கமாட்டான். அவன் நாடினால் இவரை மன்னித்து நரகத்திற்கு அனுப்பாமல் சுவனத்திற்கு நேரடியாக அனுப்பலாம். அவன் நாடினால் இவர் செய்த பாவத்திற்காக சிறிதுகாலம் நரகில் தண்டித்துவிட்டு பிறகு சுவனத்திற்குள் நிச்சயம் அனுப்புவான். ஆனால் நிரந்தர நரகம் என்பது அவனுக்கு இல்லை.

அல்லாஹ் மறுமையில் நடந்துகொள்ளும் இவ்விதம் பற்றி நாம் யாரும் சுயமாக அறிந்துகொள்ள முடியாது. அல்லாஹ்வும் அவனுடைய துாதரும் இதுபற்றி கூறினால் அன்றி இதை யாராலும் அறிந்துகொள்ளவோ இது பற்றி கருத்து தெரிவிக்கவோ முடியாது.

அடியார்கள் செய்த பாவங்களில் அல்லாஹ் மறுமையில் இவ்வாறே நடந்துகொள்வதாக அல்லாஹ் கூறியுள்ளான். அவனுடைய துாதர் (ஸல்) அவர்களும் இவ்வாறே கூறியுள்ளார்கள். இதற்குப் பிறகு இவ்விசயத்தில் மாற்றுக்கருத்து கூறுபவர்கள் வழிகேடர்கள் ஆவர். மார்க்கச் சான்றுகளில் பலவற்றை கண்டுகொள்ளாமல் விடுவதும் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தன் கருத்திற்கு தோதுவாக அவற்றுக்கு விளக்கம் கொடுப்பதும் வழிகேடர்களின் வழியாகும்.

இஸ்லாமிய வரலாற்றில் கவாரிஜ்கள் முஃதஸிலாக்கள் போன்ற வழிகேடர்கள் இவ்விசயத்தில் தவறான கொள்கையை கொண்டிருந்தார்கள். அதாவது இணைவைப்பு அல்லாத வேறு பெரும்பவாத்தை செய்தவன் முஸ்லிம் இல்லை என்றும் அவன் நரகத்தில் நிரந்தரமாக கிடப்பான் என்றும் கூறிவந்தனர்.

இது குா்ஆன் சுன்னாவிற்கு எதிரான நம்பிக்கை என்பதால் அன்றிலிருந்தே சத்தியத்தில் இருந்த நபித்தோழர்கள் - அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாத்தினர் - சலஃபுகள் இக்கருத்தை எதிர்த்து வந்தனர். எனவே பெரும்பாவம் செய்தவன் நரகில் நிரந்தரமாக கிடப்பானா? என்ற இவ்விசயம் முஸ்லிம்களின் கொள்கைப் பிரச்சனையாக உருவானது.

இந்த தவறானக் கருத்து தற்காலத்தில் சிலரிடம் தோன்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இது குறித்து குா்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் அறிந்துகொள்வோம்.

இதற்கு முன்பு இந்த சரியான நம்பிக்கைக்கு மாற்றமான கருத்து தவறுதலாக என்னிடம் ஏற்பட்டது. குறிப்பாக வட்டித் தொடர்பாக நான் எழுதிய நுாலில் நவீன வடிவங்களில் வட்டி என்ற நுாலில் வட்டி வாங்குவோர் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள் என தவறுதலாக குறிப்பிட்டிருந்தேன். இது தவறான கருத்து என்பதை சகோதரர்கள் என் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிவானாக!

நம்மிடம் ஏற்பட்ட தவறை ஒப்புக்கொண்டு சத்தியத்தை மறைக்காமல் யாருக்கும் அஞ்சாமல் அதை தெளிவுபடுத்துவது நல்லடியார்களின் பண்பாகும். இக்கட்டுரை எழுதப்பட்டதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.

இப்படிக்கு
அப்பாஸ் அலீ

மன்னிக்கப்படாத ஒரே பாவம் இணைவைப்பு மட்டுமே

அல்லாஹ் பாவமன்னிப்பைப் பற்றி பேசும்போது இணைவைப்பை மட்டும் நான் மன்னிக்கமாட்டேன். அது அல்லாத பாவங்களை நான் விரும்பினால் மன்னிப்பேன் எனக் கூறுகின்றான். பின்வரும் சான்றுகளிலிருந்து இதை அறியலாம்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அது அல்லாத(பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
அல்குர்ஆன் (4 : 48)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான் : ஒருவர் எதையும் எனக்கு இணை வைக்காமால் பூமி நிறைய (சிறு) பாவங்களுடன் என்னிடம் வந்தாலும் அதைப் போன்று (பூமி நிறைய) மன்னிப்புடன் நான் அவரை எதிர் கொள்கிறேன்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நூல் : முஸ்லிம் (5215)

"எனது இரட்சகனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது "எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான், "அவர் விபசாரத்திலோ, திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?'' எனக் கேட்டேன். அவர் விபசாரத்திலோ, திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும் தான்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நூல் : புகாரி (1237)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் தொழுகையை நிலைநாட்டி சகாத்தையும் கொடுத்து அல்லாஹ்விற்கு எதனையும் இணையாக்காமல் மரணிக்கிறாரோ அவரை மன்னிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகிறது. அவர் ஹிஜ்ரத் செய்திருந்தாலும் அல்லது பிறந்த ஊரிலே மரணித்திருந்தாலும் சரியே.
அறிவிப்பவர் : அபுத்தர்தாஃ (ரலி) நூல் : நஸயீ (3081)

மறுமை நாளில் முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்யும் பரிந்துரையைப் பற்றி மக்களில் நான் மிக அறிந்தவன் என்று அபூஹுரைரா (ரலி) கூறினார். மக்கள் அவரிடத்தில் போட்டி போட்டுக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும். (அதைப் பற்றி சொல்லுங்கள்) என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் (மறுமை நாளில்) இறைவா உனக்கு இணையாக யாரையும் ஆக்காமல் என்னை நம்பிக்கை கொண்டு உன்னைச் சந்திக்கின்ற முஸ்லிமான ஒவ்வொரு அடியானையும் நீ மன்னித்து விடு என்று கூறுவார்கள் என அபூஹுரைரா (ரலி) கூறினார்.
அறிவிப்பவர் : இப்னு தார்ரா (ரஹ்) நூல் : அஹ்மத் (9475)

நபி (ஸல்) அவர்களுக்கு முன்பு எந்த ஒரு நபிக்கும் வழங்காத மூன்று விஷயங்களை நபி (ஸல்) அவர்கள் சித்ரதுல் முன்தஹா என்ற இடத்தில் இருந்த போது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான். அவர்களுக்கு ஐந்து நேரத் தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது. அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் அவர்களுக்கு அருளப்பட்டுள்ளது. அவர்களுடைய சமூகத்தாரில் அல்லாஹ்விற்கு எதனையும் இணையாக்காமல் இருந்தவர்களுக்கு நரகத்தில் தள்ளும் பெரும் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : திர்மிதி (3198)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சொர்க்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் திறக்கப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது;
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (5013)

இணைவைக்காதவர் ஒரு நாள் நிச்சயம் சுவனம் புகுவார்

இணைவைக்காத முஸ்லிம் அல்லாஹ் நாடினால் மறுமையில் அவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நரகம் நுழையாமல் நேரடியாக சுவனம் நுழைவான். அல்லாஹ் அப்பாவங்களை மன்னிக்காவிட்டால் அதற்காக சிறிது காலம் நரகில் தண்டிக்கப்படுவான். அவன் உலகில் அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல் இருந்த காரணத்திற்காக பிறகு நரகிலிருந்து விடுவிக்கப்பட்டு சுவனத்துக்குள் அனுப்பப்டுவான். இவன் நிரந்தரமாக நரகில் இருக்கமாட்டான். பின்வரும் ஆதாரங்கள் இதை தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவரைத் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்!'' என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர் :அபூஹுரைரா (ரலிலி) நூல் : முஸ்லிம் (52)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உளப்பூர்வமாக உறுதி கூறும் எவருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்து விட்டான்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி (128)

நபி (ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்து விடுகிறாரோ அவர் நரகம் புகுவார்'' என்று கூறினார்கள். "(அப்படியானால்) யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை கற்பிக்காதவராக இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் புகுவார்'' என்று நான் சொன்னேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி (4497) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மறுமை நாளில் விசாரணை முடிந்தபின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்துவிட்ட பின் அல்லாஹ் "எவரது உள்ளத்தில் கடுகளவு ஈமான் (இறைநம்பிக்கை) உள்ளதோ அவரை (நரகத்திலிருந்து) வெறியேற்றிவிடுங்கள்'' என்று கூறுவான். உடனே அவர்கள் கருகிய நிலையில் வெறியேறுவார்கள். அப்போது அவர்கள் கரிக் கட்டைகளாகக் காட்சியளிப்பார்கள். பின்னர் அவர்கள் "நஹ்ருல் ஹயாத்' எனும் (ஜீவ) நதியில் போடப்படுவார்கள். உடனே அவர்கள் "சேற்று வெள்ளத்தில்' அல்லது "வெள்ளத்தின் கறுப்புக் களிமண்ணில்' விதை முளைப்பதைப் போன்று (புதுப் பொளிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள். அந்த வித்து(விலிருந்து வரும் புற்பூண்டுகள்) மஞ்சள் நிறத்தில் (பார்ப்பதற்கு அழகாகவும், காற்றில்) அசைந்தாடியதாக(வும்) முளைப்பதை நீங்கள் கண்டதில்லையா?
அறிவிப்பவர் - அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நுால் - புகாரி (6560)

வட்டி வாங்குவோர் நிரந்தர நரகத்திற்குரியவர்களா?

{وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ (275)} [البقرة: 275]2

அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் (வட்டியிலிருந்து) விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நீண்ட காலம் தங்கி இருப்பார்கள்.
அல்குர்ஆன் (2:275)

அல்லாஹ்வின் எச்சரிக்கை வந்த பிறகும் வட்டி வாங்குவோர் நிரந்தரமாக நரகில் இருப்பார்கள் எனக் கூறுவோர் மேற்கண்ட வசனத்தைக் குறிப்பிடுகின்றனர்.

இவர்கள் இவ்வசனத்தை அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள் என மொழிபெயர்க்கின்றனர். காலிதுான் என்ற அரபுச் இங்கே இடம்பெற்றுள்ளது.

இதற்கு என்றென்றும் நிரந்தரம் என்ற பொருள் இல்லை. நீண்ட காலம் தங்குதல் என்பதே இதன் சரியான பொருளாகும்.

இந்தக் காலத்திற்கு முடிவு இருக்கலாம். முடிவு இல்லாமலும் இருக்கலாம். முடிவடையும் காலமா? முடிவுறாத காலமா? என்பதற்குரிய பதிலை இச்சொல்லிருந்து நாம் விளங்க முடியாது. மாறாக வேறு சான்றுகளின் மூலமாகவே இதை அறிய முடியும்.

எனவே இணைவைப்பாளர்கள் காஃபிர்கள் விசயத்தில் இச்சொல் பயன்படுத்தப்பட்டால் அவர்கள் முடிவில்லாமல் நரகில் நிரந்தரமாக கிடப்பார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இவர்களுக்கு நிரந்தர நரகம் உண்டு என வேறு சான்றுகள் தெளிவாகக் கூறுகின்றது.

முஃமின்கள் முஸ்லிம்கள் விசயத்தில் இவ்வாறு கூறப்பட்டிருந்தால் நீண்ட காலத்திற்குப் பின் இத்தண்டனை முடிவடையும் என்று புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இவர்கள் இறுதியில் சுவனம் புகுவார்கள் என வேறு சான்றுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

பிறரை கொலை செய்தவன் நிரந்தர நரகத்திற்குரியவனா?

{وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا (93)} [النساء: 93]4

ஒரு இறைநம்பிக்கையாளனை வேண்டுமென்றே கொலை செய்பவருக்கு அவருடைய கூலி நரகமாகும். அதில் அவன் நீண்ட காலம் தங்குவான். அல்லாஹ் அவன்மீது கோபம் கொள்கிறான். மேலும் அவனை சபிக்கிறான். மேலும் பயங்கரமான தண்டனையையும் அவனுக்காக தயார் செய்துள்ளான்.
அல்குா்ஆன் (4 93)

இந்த வசனத்திலும் காலிதன் என்ற சொல்லே இடம்பெற்றுள்ளது. இச்சொல்லுக்கு நிரந்தரமாக தங்குதல் என்ற பொருள் இல்லை என்பதால் இதை வைத்துக்கொண்டு கொலைக்கு நிரந்தர நரகம் எனக் கூற முடியாது. இது பற்றி முன்பு விபரமாக அறிந்துகொண்டோம்.

இது மிகப்பெரிய பாவம் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. இதைச் செய்தவன் நரகில் நீண்ட காலம் தங்குவான்.

அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் அதிபயங்கரமான தண்டனைக்கும் அவன் உரியவனாவான்.

தற்கொலை செய்தவனுக்கு நிரந்தர நரகமா?

5778حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سُلَيْمَانَ قَالَ سَمِعْتُ ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக்கொண்டேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நுால் (புகாரி 5778)

தற்கொலை செய்துகொண்டவர் மறுமையில் நரகில் நிரந்தரமாக தண்டனையை அனுபவிப்பார் என இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இணைவைக்காமல் மரணித்தவர் நரகில் நிரந்தரமாக இருக்கமாட்டார் எனக் குா்ஆனும் ஏராளமான ஹதீஸ்களும் கூறுகின்றது. இந்த அடிப்படைக்கு முரணில்லாமல் இந்த ஹதீஸை புரிந்துகொள்ள வேண்டும்.

இச்செய்தியில் தற்கொலைக்குரிய தண்டனை பொதுவாக கூறப்பட்டுள்ளது. தற்கொலை செய்தவர் முஸ்லிமாக இருந்தாலும் அவர் நரகில் நிரந்தரமாக கிடப்பார் என இச்செய்தியில் சொல்லப்படவில்லை.

ஒரு குறிப்பிட்ட சாராருக்கு ஒரு சிறப்பு கூறப்படுகின்றது. அதற்கு மாற்றமான எச்சரிக்கை பொதுப்படையாக சொல்லப்படுமேயானால் இவ்விரண்டையும் முரணில்லாமல் அழகிய முறையில் இணைத்து விளங்கலாம்.

இந்த குறிப்பிட்ட சாராருக்கு எவ்விசயத்தில் என்ன சிறப்பு சொல்லப்பட்டதோ அவ்விசயத்தில் மட்டும் இவர்கள் அந்த பொதுவான எச்சரிக்கையிலிருந்து விதிவிலக்கல் ஆனவர்கள் ஆவர். இது அல்லாத மற்ற தண்டனைகள் எச்சரிக்கைகள் இவர்களுக்கும் உரியதாகும்.

இந்த அடிப்படையில் இணைவைக்காதவர்கள் நரகில் நிரந்தரமாக இருக்கமாட்டார்கள் என மார்க்கம் கூறுவதால் இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ள நிரந்தரமாக தண்டனை அனுபவிப்பான் என்ற எச்சரிக்கையை மட்டும் இது முஸ்லிம் விசயத்தில் கூறப்படவில்லை. மாறாக காஃபிர்களுக்கு சொல்லப்பட்டது எனப் புரிந்துகொள்ள வேண்டும். மற்றபடி மலையிலிருந்து விழுவான். விசயத்தை உண்பான் வயிற்றை கிழித்துக்கொள்வான் ஆகிய தண்டனைகள் இந்த ஹதீஸில் சொல்லப்பட்டவாறு தற்கொலை செய்துகொண்ட முஸ்லிமுக்கு பொருந்தக்கூடியதாகும். அல்லாஹ் நாடும் வரை இவ்வாறு அவன் நரகில் தண்டனைகளை அனுபவிப்பான். அல்லாஹ் நாடினால் அவனை மன்னிக்கலாம். அல்லாஹ் தண்டிக்க நாடினால் சிறிது காலம் இந்த தண்டனையை அவனுக்கு வழங்கிய பின் அவன் சுவனம் செல்வான்.

தற்கொலை செய்துகொண்ட ஒரு நபித்தோழரை மன்னிக்குமாறு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ் அவரை மன்னித்துள்ளான்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தாருக்குக் கோட்டை ஒன்றிருந்தது. தவ்ஸ் குலத்தைச் சேர்ந்த துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் ஹிஜ்ரத் செய்யும்போது எதிரிகளிடமிருந்து உங்களைத்) தற்காத்துக்கொள்ள உறுதியான கோட்டை கொத்தளம் தங்களுக்கு வேண்டுமா? (அத்தகைய கோட்டை தவ்ஸ் குலத்தாரின் வசிப்பிடத்தில் உள்ளது)'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதற்கு இணங்கவில்லை. (அந்த வாய்ப்பை மதீனாவாசிகளான) அன்சாரிகளுக்கென அல்லாஹ் வழங்கியிருந்ததே அதற்குக் காரணமாகும்.

நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) சென்றபோது நபி (ஸல்) அவர்களிடம் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்களும் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். துஃபைல் (ரலி) அவர்களுடன் அவர்களுடைய சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனிதரும் நாடு துறந்து சென்றார். (அவர்கள் மதீனாவிற்குச் சென்றபோது) மதீனாவின் தட்ப வெப்ப நிலை அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அந்த மனிதர் நோய்வாய்ப்பட்டுவிட்டார். (நோயின் வேதனை பொறுக்க முடியாமல்) பதறிப்போன அந்த மனிதர் தம்முடைய பெரிய அம்புகளை எடுத்துத் தமது கை நாடியை அறுத்துக் கொண்டார். கைகளிலிருந்து இரத்தம் கொட்டியது. இறுதியில் அவர் இறந்துவிட்டார். அவரைத் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் கனவில் கண்டார்கள். அவர் நல்ல நிலையில் தான் இருந்தார். ஆனால், அவருடைய இரு கைகளும் போர்த்தி மூடப்பட்டு இருப்பதைக் கண்டார்கள். அவரிடம், "உம்மிடம் உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்துகொண்டான்?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "நான் நபி (ஸல்) அவர்களிடம் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்ததால் அல்லாஹ் எனக்கு மன்னிப்பு அளித்தான்'' என்று பதிலளித்தார். துஃபைல் (ரலி) அவர்கள், "ஏன் உம்மிரு கைகளும் போர்த்தி மூடப்பட்டிருக்கின்றன?'' என்று கேட்டார்கள். "நீ வீணாக்கிய உனது கையை நாம் சீராக்கமாட்டோம்'' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) என்னிடம் கூறப்பட்டது'' என்று அவர் சொன்னார்.

துஃபைல் (ரலி) அவர்கள் இக்கனவு பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! அவருடைய இரு கைகளுக்கும் மன்னிப்பு அளிப்பாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.

நுால் - முஸ்லிம் (184)

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

Check Also

நவீன வழிகேடுகளும், வழிகேடர்களும்

நவீன வழிகேடுகளும், வழிகேடர்களும் உரை : அஷ்ஷைக் அப்பாஸ் அலி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe …

Leave a Reply