Home / கட்டுரை / கட்டுரைகள் / இஸ்லாத்தின் பார்வையில் ஜமாஅத் தொழுகையின் சட்டமும் அதற்கான ஆதாரங்களும்…

இஸ்லாத்தின் பார்வையில் ஜமாஅத் தொழுகையின் சட்டமும் அதற்கான ஆதாரங்களும்…

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி

இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. கடமையான தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றுமாறு இந்த மார்க்கம் சொல்லித் தந்திருக்கின்றது. இஸ்லாத்தின் பார்வையில் ஜமாஅத் தொழுகையின் சட்டத்தை அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவின் மூலமாக வாசித்துப் பார்க்கின்ற போது ஜமாஅத் தொழுகையானது ஒவ்வொரு ஆண்கள் மீதும் வாஜிபான தொழுகைதான் என்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. இதற்கு அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவில் இருந்து சில ஆதாரங்களை பார்க்க முடிகின்றது. அவைகளிலிருந்து சிலவற்றை இங்கே முன்வைக்கலாமென நினைக்கிறேன்.

முதலாவது ஆதாரம்:

அல்லாஹ் கூறுகிறான்

“(நபியே) நீர் அவர்களுடன் (போர்க்களத்தில்) இருக்கும் போது அவர்களுக்குத் தொழுகை நடாத்தினால் அவர்களில் ஓர் அணியினர் உம்முடன் தமது ஆயுதங்களை ஏந்தியவர்களாக (தொழுவதற்கு) நிற்கட்டும்……”
(அந் நிஸா : 102)

இந்த வசனமானது ஜமாஅத் தொழுகையின் சட்டத்தை எடுத்துக் காட்டுகின்றது. யுத்த நேரமாக இருந்தாலும் அந்த நேரத்திலும் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட வேண்டுமென்பதற்காகத்தான் அந்த பயங்கரமான நேரத்திலும் எப்படி தொழ வேண்டுமென்ற விதி முறையை அல்லாஹ் சொல்லித் தந்திருக்கிறான். முதலாவது ஒரு கூட்டம் தொழ மற்றைய சாரார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் பாதுகாப்பு கடமையில் இருந்த சாரார் தொழுகையிலும் தொழுகையில் இருந்த கூட்டம் பாதுகாப்புக்கும் வந்து பின்பு இமாமுடன் சேர்ந்து இரு சாராரும் தொழுகையை முடிக்க வேண்டுமென்ற ஒழுங்கினை மார்க்கம் பிரத்தியேகமாக சொல்லித் தந்திருப்பதானது ஜமாஅத் தொழுகை பர்ளு ஐன் (எல்லோர் மீது கடமை) ஆன கடமைதான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

இரண்டாவது ஆதாரம்:

▪அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“நயவஞ்சகர்கள் மீது பாரமான தொழுகை இஷாத் தொழுகையும் பஜ்ர்த் தொழுகையுமாகும். இதில் உள்ள சிறப்புகளை அவர்கள் தெரிந்து கொண்டால் தவண்டு தவண்டாவது வருவார்கள். ஒரு மனிதரை மக்களுக்கு தொழுகை நடாத்துமாறு ஏவி விட்டு பள்ளிக்கு சமூமளிக்காதவர்களது வீடுகளுக்கு விறகு கட்டைகளைக் கொண்டு சென்று அவர்களது வீடுகளை எரிப்பதற்கு மனம் நாடுகிறது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி முஸ்லிம்)

▪”வீடுகளில் பெண்களும் சிறார்களும் இல்லாதிருப்பார்களானால் நான் இஷாத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு (சமுகம் தராதவர்களது) வீடுகளை எறிக்குமாறு கட்டளையிட்டிருப்பேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

இந்த இரண்டு நபிமொழிகளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிக்கு ஜமாஅத் தொழுகையை நிறைவேற்ற சமூகமளிக்காத சாராரை கடுமையான எச்சரித்திருப்பதானது ஜமாஅத் தொழுகை கடமையான ஒன்றுதான் என்பதை தெளிவாகவே சொல்லித் தந்திருக்கின்றது.

மூன்றாவது ஆதாரம்:

கண் பார்வையற்ற ஸஹாபி ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே என்னுடைய இரு கண்களாலும் பார்க்க முடியாது. பள்ளிக்கு அழைத்து வருவதற்காக எந்தவொரு உதவியாளர்களும் கிடையாது. எனவே எனக்கு வீட்டில் தொழுது கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்க அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி வழங்கி விட்டு மீண்டும் அந்த ஸஹாபியை அழைத்து அதான் சொல்வது கேட்கின்றதா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட உடன் அந்த ஸஹாபி ஆம் என்றார். எனவே நீர் பள்ளிக்கு சமூகளிப்பீராக” என்று கூறினார்கள்.
(முஸ்லிம்)

மேற்கண்ட இந்த ஹதீஸில் சொல்லப்படுகின்ற விடயங்களை உன்னிப்பாக அவதானிக்கும் போது கண் பார்வையற்று இருந்து பள்ளிக்கு அழைத்து வருவதற்கு யாருமே இல்லாத மனிதரே கட்டாயம் ஜமாஅத் தொழுகையை நிறைவேற்ற பள்ளிக்கு வர வேண்டும் என்றால் அது கடமையான தொழுகைதான் என்பதை புரிந்து கொள்ளலாம்.

மேலும் ஜமாஅத் தொழுகையின் சட்டத்தைப் பற்றி இமாம் இப்னு பாஸ் றஹிமஹுல்லாஹு அவர்களிடம் கேட்கப்பட்ட போது, சரியான சட்டத்தை தெளிவுபடுத்துவதற்கு முன் மார்க்க அறிஞர்கள் இது தொடர்பாக என்ன நிலைப்பாடுகளில் இருக்கிறார்கள் என்பதை சொல்லித் தருகிறார்கள்.

அந்தடிப்படையில் சில அறிஞர்கள் ஜமாஅத்தாக தொழுவது நிபந்தனையான ஒன்றாகும். யாராவது வேண்டுமென்று தனிமையாக தொழுகிறாரோ அவரது தொழுகை பாதிலாகிவிடும் என்று சொல்கின்றனர்.

இன்னும் சில சாரார் ஜமாஅத் தொழுகையின் சட்டம் பற்றிக் கூறும் போது, அது கடமையான தொழுகைதான் என்று கூறுக்காட்டுகின்றனர்.

இன்னும் சில கூட்டம் ஜமாஅத் தொழுகை பர்ளு கிபாயாவான தொழுகையாகும். சில சாரார் ஜமாஅதாக நிறைவேற்றுவதானது மற்றையவர்களது சட்டத்தை இல்லமலாக்கி விடும் என்று விளக்கம் சொல்கின்றனர்.

இன்னும் சில மக்கள் இது சுன்னத்தான தொழுகைதான் என்று சொல்லி இருக்கின்றனர்.

இப்படி ஒவ்வொரு சாராரதும் நிலைப்பாடுகளை சொன்னதன் பின்னர் இந்த நிலைப்பாடுகளில் சரியான கருத்தை சொல்லும் போது, ஜமாஅத் தொழுகையானது அது வாஜிபான ஒன்றுதான் என்று சொல்லி விட்டு இதற்கான ஆதாரங்களாக சில ஆதாரங்களை முன்வைக்கின்றார்கள். அந்தடிப்படையில்,

1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

“யார் அதான் சொல்வதைக் கேட்டும் பள்ளிக்கு சமூகமளிக்கவில்லையோ அவர் காரணம் இன்றி தொழ முடியாது. அது என்ன காரணம் என்று இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் கேட்கப்பட்ட போது பயம், நோய் என்று பதிலளித்தார்கள்.
(இப்னு மாஜா)

இந்த செய்தியானது அதான் சொல்வதை செவிமடுத்தும் அத்தியாவசிய காரணங்களான மேற்சொன்ன காரணங்களின்றி ஜமாஅத் தொழுகையை வேண்டுமென்று விட்டுவிட்டால் அவர்கள் தனிமையில் தொழக்கூடாது என்று சொல்வதன் மூலம் இது கடமைதான் என்பதை இமாமவர்கள் விளங்கப்படுத்துகின்றார்கள்.

இந்த ஆதாரம் தவிர மேலே நாம் சொன்ன ஆதாரங்களை எல்லாம் முன்வைத்து ஜமாஅத் தொழுகை வாஜிபான ஒன்றாகும் என தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

எனவே அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை ஜமாஅத்தாக நிறைவேற்றி அதன் மூலம் அல்லாஹ்வுடைய அன்பைப் பெற்ற மக்களாக வாழ எல்லாம் வல்ல அருள்புரிவானாக.

அல்லாஹு அஃலம்…

Check Also

ஜனாஸாத் தொழுகை | பாகம் – 01 |

ஜனாஸாத் தொழுகை | பாகம் – 01 | அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our Youtube …

Leave a Reply