Home / கட்டுரை / காணாமல் போன பொருளை பள்ளியில் தேடலாமா ?

காணாமல் போன பொருளை பள்ளியில் தேடலாமா ?

காணாமல் போன பொருளை பள்ளியில் தேடலாமா ?

பதில் விளக்கம் : மௌலவி. யூனுஸ் தப்ரீஸ்.

நாம் சில நேரங்களில் நமது ஏதாவது ஒரு பொருளை தவற விட்டு, அதை தேடுவது வழக்கம். ஆனால் பள்ளியில் ஒரு பொருளை தவற விட்டு, அந்த பொருளை தேடலாமா ? தேடக் கூடாதா என்றால், காணாமல் போன பொருள் உனக்கு கிடைக்காமல் போகட்டும் என்று வந்த ஹதீஸை வைத்து, தேடக் கூடாது என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் நமது பணமோ அல்லது ஏதாவது பொருளோ, அல்லது முக்கியமான அத்தாட்சியோ பள்ளியில் துளைத்து விட்டு தேடலாமா ? அல்லது தேடக் கூடாதா ? எனபதை இது சம்பந்தமான ஹதீஸ்களை ஒன்றிணைத்து விடை கண்டால் தெளிவு கிடைத்து விடும்.
பின் வரக் கூடிய ஹதீஸை கவனியுங்கள்.

1. இறைத்தூதர் நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

காணாமற்போன ஒரு பொருளைப் பள்ளிவாசலுக்குள் தேடிக்கொண்டிருப்பவரின் குரலைச் செவியுறுபவர் “அல்லாஹ் அதை உனக்குத் திரும்பக் கிடைக்காமல் செய்வானாக!” என்று கூறட்டும். ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (RA), நூல்: முஸ்லிம்- 981

இந்த ஹதீஸின் மூலம் நமது ஏதாவது பொருள் பள்ளியில் இழந்து விட்டால், அதை தேடும் போது பிறர் இப்படிதான் சொல்ல வேண்டும் என்பதை புரிந்து கொள்கிறோம். ஆனால் நபியவர்கள் யாருக்கு இப்படி சொல்ல வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ் உறுதிப் படுத்துகிறது.

புரைதா (RA) அவர்கள் கூறியதாவது:

ஒரு முறை) நபி (ஸல்) (ﷺ) அவர்கள் தொழுது முடித்ததும் ஒரு மனிதர் எழுந்து “(காணாமற் போன எனது) சிவப்பு ஒட்டகத்தி(னைக் கண்டுபிடித்து அதனி)டம் (என்னை) அழைத்துச் செல்பவர் யார்?” என்று கேட்டார். அப்போது நபி (ﷺ) அவர்கள், “(உனது ஒட்டகம்) உனக்குக் கிடைக்காமற் போகட்டும். பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்பட்டனவோ அதற்கு மட்டுமே உரியனவாகும்” என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம்- 983

யாருக்கு இப்படி சொல்ல வேண்டும் என்பதை இந்த ஹதீஸின் மூலம் நபியர்கள் சொல்லித் தருகிறார்கள். அதாவது தனது ஒட்டகத்தை எங்கயோ தவற விட்டு, பள்ளிவாசலுக்குள் வந்து சப்தம் போட்டு தேடக் கூடிய நிலை இருந்தது. அதை தான் நபியவர்கள் கண்டிக்கிறார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்று அடிக்கடி தனது போன், பணம், வாட்ச், செருப்பு, அல்லது ஏதாவது பார்சல்களை தவற விட்டு விட்டு தேடக் கூடிய நிலையை நாம் காணலாம். அப்படி தேடும் போது உனக்கு அது கிடைக்காமல் போகட்டும் என்று பக்கத்தில் உள்ளவர் சொன்னால் அந்த இடத்தில் பெரிய சண்டையே வந்து விடும். நானே எனது பொருளை துளைத்து விட்டு, வருத்தத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன், நீ என்ன இப்படி சொல்கிறாய் என்று பள்ளிக்குள் கைகலப்பே வந்து விடும். எனவே “அன்றைய காலத்தில் பள்ளிக்கு வெளியே ஒட்டகத்தை தவற விட்டு, தேடக் கூடியவர்களுக்கு சொல்லப்பட்ட செய்தி என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்”.

Check Also

முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும் ?

முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும் ? தொகுப்பு : யாஸிர் ஃபிர்தௌசி அழைப்பாளர் அல்- ஜுபைல் தஃவா நிலையம், …

Leave a Reply