Home / Islamic Months / Muharram / முஹர்ரம் மற்றும் ஆஷூரா தொடர்பான மார்க்கத் தீர்ப்புக்கள்

முஹர்ரம் மற்றும் ஆஷூரா தொடர்பான மார்க்கத் தீர்ப்புக்கள்

بسم الله الرحمن الرحيم

முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு பிறருக்கு வாழ்த்துத் தெரிவிக்கலாமா?

முஹர்ரம் மாதம் பிறக்கும்போது சில முஸ்லிம்கள் வாழ்த்துத் தெரிவிப்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். இது போன்ற சந்தர்ப்பங்களில் வாழ்த்துத் தெரிவிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா? என்பது குறித்த அறிஞர்களின் சில பத்வாக்களை நாம் இங்கு பதிய வைத்திருக்கின்றோம்.

  • சஊதி அரேபியா பத்வாக் குழுவிடம் “கிறிஸ்தவ வருடப் பிறப்பு, ஹிஜ்ரி வருடப் பிறப்பு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு ஆகிய தினங்களில் முஸ்லிமல்லாதவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கலாமா?” என்று வினவப்பட்டபோது அவர்கள் பின்வருமாறு பதிலளிக்கின்றார்கள்:

“இது போன்ற தினங்களை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவிப்பது கூடாது. ஏனென்றால், இதுபோன்ற தினங்களைக் கொண்டாடுவது மார்;க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியமன்று.”

(பத்வா இலக்கம்: 20795)



  • அஷ்ஷெய்ஹ் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிளஹுல்லாஹ் அவர்களிடத்தில் “புதிய ஹிஜ்ரி வருடப் பிறப்பை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவிக்கலாமா?” என வினவப்பட்டபோது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

“இதற்கு எந்த அடிப்படை ஆதாரத்தையும் நாம் அறியமாட்டோம். ஹிஜ்ரி வருடத்தின் நோக்கம் அதன் ஆரம்ப நாளை விஷேட தினமாகவும் வாழ்த்துத் தெரிவிக்கின்ற தினமாகவும் அமைத்துக் கொள்வதல்ல. இது பற்றிப் பேசிக் கொள்வதுமாக, கொண்டாடக்கூடிய தினமுமாக மற்றும் வாழ்த்துத் தெரிவிக்கக் கூடியதுமாக இது அமையப் பெற்றிருக்கக் கூடாது. ஹிஜ்ரி ஆண்டு உருவாக்கப்பட்டது உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்தது போன்ற உடன்படிக்கைகளைப் பிரித்தறிந்து கொள்வதற்கேயாகும். அவருடைய காலத்தில் கிலாபத் விரிவடைந்தபோது அவரிடத்தில் திகதியிடப்படாத சில கடிதகங்கள் வரத் தொடங்கின. எனவே, கடிதங்களும் புத்தகங்களும் அறியப்படுவதற்குத் திகதியமைப்பை உண்டாக்க அவர்கள் தேவை கண்டார்கள். இது விடயமாக அவர்கள் ஏனைய ஸஹாபாக்களுடன் கலந்தாலோசித்தார்கள். ஏனைய ஸஹாபாக்கள் அவருக்கு மதீனா ஹிஜ்ரத் நிகழ்வை மையமாகக் கொண்டு ஹிஜ்ரி ஆண்டை ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கினார்கள். கிறிஸ்தவ ஆண்டு அந்நேரத்தில் நடைமுறையிலிருந்த போதும் அக்கிறிஸ்தவ ஆண்டை விட்டும் அவர்கள் அதனை எடுக்காமல் திரும்பிக் கொண்டார்கள். ஹிஜ்ரத் நிகழ்வையே அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். உடன்படிக்கைகளையும் கடிதங்களையும் மாத்திரம் அறிந்து கொள்வதற்காகவே அவர்கள் ஹிஜ்ரத் நிகழ்வை முஸ்லிம்களுடைய ஆண்டின் ஆரம்பமாக நியமித்தார்கள். மாறாக, விஷேட ஒரு தினத்திற்காகவும் அது குறித்துப் பேசிக்கொள்வதற்காகவும் இக்காரியத்தை அவர்கள் செய்யவில்லை. அப்படியென்றால் இது பித்அத் என்ற நிலைக்குச் சென்றுவிடும்.”

“எனக்கு ஒரு நபர் குல்லு ஆமின் வஅன்தும் பிஹைர் – எல்லா வருடத்திலும் நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும் – என்று வாழ்த்து தெரிவிக்கின்றார். இவ்வார்த்தையை இத்தினங்களில் கூறுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?” என்று அஷ்ஷெய்ஹ் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிளஹுல்லாஹ் அவர்களிடம் வினவப்பட்டபோது அவர்கள்: இல்லை. இது அனுமதிக்கப்பட்டதல்ல, இவ்வாறு செய்வது கூடாது” என பதிலளித்தார்கள்.

(பார்க்க: அல்இஜாபதுல் முஹிம்மா பில் மஷாகிலில் முலிம்மா, பக்கம்: 229)


முஹர்ரம் மாதத்தின் ஆரம்ப தினத்தைக் கொண்டாடலாமா?

  • அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் “முஹர்ரம் மாதத்தின் ஆரம்ப தினத்தைக் கொண்டாடுவது குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன?” என்பது பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள் பின்வருமாறு பதிலளிக்கின்றார்கள்:

“நாட்களை, மாதங்களை, வருடங்களை கொண்டாடக்கூடிய காலங்களாக குறிப்பாக்குவதைப் பொறுத்தவரையில் அவை மார்க்கத்தின் பால் கொண்டு செல்லப்பட வேண்டியவைகளாகும். ஊர் வழமை என்பதன் பால் கொண்டு செல்லப்பட வேண்டியதல்ல. ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது மனிதர்களுக்கு அவர்கள் விளையாடக்கூடிய இரு தினங்கள் காணப்பட்டன. அப்போது அவர்கள்: இத்தினங்கள் எத்தகையவை? என வினவினார்கள். அதற்கு மனிதர்கள்: நாம் இத்தினங்களில் ஜாஹிலிய்யாக் காலத்தில் விளையாடக் கூடியவர்களாக இருந்தோம் என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் இவ்விரு தினங்களுக்கும் பகரமாக இதைவிட வேறு தினங்களை உங்களுக்கு மாற்றியமைத்திருக்கின்றான். அத்தினங்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினமும் நோன்புப் பெருநாள் தினமுமாகும்.

(அபூதாவூத்)




பெருநாள் தினங்கள் என்பன இஸ்லாத்தில் வழமையைப் பின்தொடர்ந்து உருவாக்கப்பட வேண்டும் என்றிருந்தால் மனிதர்கள் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு பெருநாள் தினத்தை உருவாக்கியிருப்பார்கள். மார்க்கம் அனுமதித்த பெருநாள் தினங்களுக்கு எவ்விதப் பயனும் இருந்திருக்காது. அதற்கடுத்ததாக, கிறிஸ்தவர்களுக்கு ஒப்பாக இவர்கள் வருடத்தின் ஆரம்ப தினத்தைக் கொண்டாடும் தினமாக எடுத்திருக்கின்றார்கள் என்ற விடயத்திலும் அச்சம் கொள்ளப்படுகின்றது. ஏனென்றால், கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ ஆண்டின் பிறப்பை கொண்டாடும் தினமாக எடுத்திருக்கின்றார்கள். எனவே, முஹர்ரம் மாதத்தைப் பெருநாளாக எடுத்துக் கொள்வதில் மற்றோர் எச்சரிக்கப்பட்ட விடயமும் காணப்படுகின்றது.”

(மஜ்மூஉ பதவா இப்னி உஸைமீன்: 16/126)



“குல்லு ஆமின் வஅன்தும் பிஹைர்” என்று வாழ்த்துத் தெரிவிப்பது கூடுமா?

  • இது குறித்து அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

“இந்த வார்த்தை முழுவதும் அடிப்படை ஆதாரம் இல்லாத வார்த்தையாகும். தகப்பலல்லாஹு தாஅதகும் – அல்லாஹ் உங்கள் வழிபாடுகளை ஏற்றுக் கொள்வானாக – என்று கூறுவது உமக்குப் போதுமானதாகும். குல்லு ஆமின் வஅன்தும் பிஹைர் என்று கூறுவது காபிர்களின் காணிக்கையாகும். எங்களுடைய பொடுபோக்கின் காரணமாக அது முஸ்லிம்களிடத்தில் கூறப்படக் கூடியதாக மாறிவிட்டது. நீர் ஞாபமூட்டுவீராக! ஏனெனில், நிச்சயமாக ஞாபகமூட்டல் விசுவாசிகளுக்குப் பயனளிக்கும்.”

(ஸில்ஸிலதுல் ஹுதா வந்நூர்: ஒலிப்பதிவு நாடா இல: 323)


அரபா நோன்பும் ஆஷூரா நோன்பும் சிறுபாவங்கள் மற்றும் பெரும் பாவங்கள் ஆகியவற்றுக்குப் பரிகாரமாக அமையுமா?

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரபா நோன்பு குறித்து, அது முன்சென்ற வருடத்தின் பாவங்களுக்கும் அடுத்து வரும் வருடத்தின் பாவங்களுக்கும் பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள். ஆஷூரா நோன்பு குறித்து, அது முன்சென்ற வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள்.

(முஸ்லிம்)


ஹதீஸின் வெளிப்படையான அர்த்தம் இந்நோன்புகள் சிறுபாவங்களுக்கும் பெரும்பாவங்களுக்கும் பரிகாரமாக அமையும் என்பதேயாகும். என்றாலும், இந்நோன்புகள் பெரும்பாவங்களுக்குப் பரிகாரமாக அமையாது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். ஏனென்றால், அரபா நோன்பும் ஆஷூரா நோன்பும் ரமழான் மாத நோன்பை விடவும் இன்னும், ஐவேளைத் தொழுகைகளைவிடவும் சிறப்பு வாய்ந்தவையல்ல.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

‘ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ, ஒரு ரமழானிலிருந்து மறு ரமழான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும். பெரும்பாவங்கள் தவிர்ந்து கொள்ளப்பட்டாலே தவிர.”

(முஸ்லிம்)
பெரும்பாலான அறிஞர்களின் கருத்தே சரியான கருத்தாகும்.
பார்க்க: பத்ஹுல் அல்லாம், பாகம்: 2, பக்கம்: 702


முஹர்ரம் மாதத்தின் பத்தாவது தினத்திலும் பதினோராவது தினத்திலும் நோன்பு நோற்க முடியுமா?

“நீங்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்! அத்தினத்தில் யூதர்களுக்கு நீங்கள் மாற்றம் செய்யுங்கள்! அத்தினத்திற்கு முன்னைய ஒரு நாள் அல்லது பிந்திய ஒரு நாள் நீங்கள் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக


ஒரு ஹதீஸ் அஹ்மத் என்ற கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. என்றாலும், இது ஒரு பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் முஹம்மத் இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அபீ லைலா என்பவர் இடம்பெறுகின்றார். இவர் நம்பகத் தன்மையில் மோசமானவராகக் கருதப்படுகின்றார். இன்னும், தாவூத் இப்னு அலீ என்பவரும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறுகிறார். இவரும் பலவீனமானவராவார்.

இந்த ஹதீஸ் பலவீனம் என்ற காரணத்தால் ஒன்பதாவது தினமும் பத்தாவது தினமும் நோன்பு நோற்பதே விரும்பத்தக்கதாகும்.

பத்தாவது தினத்தில் யூதர்களும் நோன்பு நோற்கின்றார்கள் என்பதை கேள்விப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: நான் அடுத்து வரக்கூடிய வருடத்தில் உயிரோடு இருந்தால் நிச்சயமாக ஒன்பதாவது தினத்திலும் நோன்பு நோற்பேன் என்று கூறினார்கள். பதினோராவது தினத்தில் நான் நோன்பு நோற்பேன் என்று அவர்கள் கூறவில்லை.

முஹர்ரம் மாதத்தின் ஆரம்ப நாள் எதுவென்று சரியாகத் தெரியாமல் யாராவது குழம்பிப் போனால் அவர் இம்மூன்று தினங்களிலும் நோன்பு நோற்பது குற்றமாகாது. இக்கருத்தை இப்னு ஸீரீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியதாக இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள்.”


பார்க்க: பத்ஹுல் அல்லாம், பாகம்: 2, பக்கம்: 704


தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்

Check Also

மூஸா நபியின் வாழ்வில் சில படிப்பினைகள்

மூஸா நபியின் வாழ்வில் சில படிப்பினைகள் வழங்குபவர்: அஷ்ஷேக் யாஸிர் ஃபிர்தவ்ஸி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom …

Leave a Reply