Home / இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ / இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் தொடர் 01

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் தொடர் 01

ஆதாரபூர்வமற்ற செய்திகள்
01/01

தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்

மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி

மார்க்கம் என்பது புத்தி (பகுத்தறிவு) தான். யாருக்கு மார்க்கம் இல்லையோ அவருக்கு புத்தி இல்லை.

இந்த செய்தியை இமாம் நஸாயி தனது الكنى விலும், அவர் வழியாக இமாம் தௌலாபி தனது الكنى والألقاب இலும் பதிந்துள்ளனர்.

“இது பாதிலான, மறுக்கப்பட்ட செய்தி” என்று இமாம் நஸாயி கூறுகின்றார்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் *பிஷ்ர் இப்னு غஙாலிப் என்பவரே இதற்குக் காரணம்.
“அவர் அறியப்படாதவர்” (மஜ்ஹூல்) என்று இமாம் அஸ்زதீ கூறியுள்ளதை இமாம் தஹபீ தனது ميزان الاعتدال இலும், இமாம் இப்னு ஹஜர் தனது لسان الميزان இலும் அங்கீகரித்துள்ளனர்.

புத்தியின் சிறப்பு பற்றி இந்த செய்தி உட்பட முப்பது சொச்சம் செய்திகளை தாவூத் இப்னுல் முஹப்பிர் என்பவர் வழியாக
இமாம் ஹாரிஸ் இப்னு அபீஉஸாமா தனது முஸ்னதில்” பதிந்துள்ளார்.
“அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவை” என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

இமாம் ஸுயூத்தி தனது
“புனையப்பட்ட முத்துக்கள் 4/10” இலும், இமாம் தாஹிர் அல்பதனீ அல்ஹிந்தீ தனது “இட்டுக்கட்டப்பட்டவைகளை நினைவூட்டல் 29/30” இலும் இந்த செய்தியை அடையாப்படுத்தியுள்ளனர்.

இந்த தாவூத் இப்னுல் முஹப்பிர் பற்றி இமாம் தஹபீ கூறுகையில் :

((“புத்தி” என்று புத்தகத்தை அவர் எழுதாமல் இருந்திருக்கலாம். “அவருக்கு ஹதீஸ் என்றால் என்னவென்று தெரியாது” என்று இமாம் அஹ்மதும், “ஹதீஸ் துறையில் நம்பத்தகுந்தவர் அல்ல” என்று இமாம் அபூஹாதமும், “ஹதீஸ் துறையில் விடப்பட்டவர்” என்று இமாம் தாரகுத்னீயும் கூறுகின்றனர்.

“புத்தி பற்றிய செய்தித் தொகுப்பை மைஸரா இப்னு அப்துரப்பிஹி தான் இட்டுக்கட்டினார். அதை அவரிடமிருந்து இந்த தாவூத் திருடி வேறு அறிவிப்பாளர் வரிசையை சேர்த்துக் கொண்டார். அப்துல் அஸீஸ் இப்னு ரஜாவும், ஸுலைமான் இப்னு ஈஸா அஸ்ஸிஜ்ஸீயும் இதை திருடி அறிவித்துள்ளனர்.” என்று இமாம் தாரகுத்னீ கூறியதாக அப்துல் கனீ இப்னு ஸயீத் கூறுகிறார்.

இமாம் அபூபக்ர் இப்னு அபித்துன்யா உடைய “புத்தியும் அதன் சிறப்பும்” என்ற கிதாபை ஆய்வு செய்ததில் அவற்றில் சிலது பலவீனமானதாகவும் இன்னும் சிலது இட்டுக்கட்டப்பட்டவையாகவும் இருக்கக் கண்டேன். எதுவும் ஆதாரபூர்வமானதாக இல்லை.

இந்த கிதாபை சரி பார்த்த ஸாஹித் அல்கௌஸரி அவை பற்றி மௌனம் காத்திருப்பது ஆச்சரியம் தான். அல்லாஹ் எங்களையும் அவரையும் மன்னிக்கட்டும்.

“புத்தி பற்றிய செய்திகள் அனைத்தும் பொய்” என்று இமாம் இப்னுல் கையிம் தனது “அல்மனாருல் முனீப் 25” இல் கூறியுள்ளார்.

பிற்சேர்க்கை:

1) இமாம் நஸாயி உடைய الكنى என்ற கிதாபு : الكنى என்றால் புனைப்பெயர்கள் என்று பொருள். இந்தப் பெயர் கொண்ட கிதாபுகளில் புனைப்பெயர்களில் அறியப்படும் அறிவிப்பாளர்கள் பற்றிய தகவல்கள் பதியப்பட்டிருக்கும். இந்தப் புத்தகத்தின் பிரதிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

2) இமாம் தௌலாபி உடைய الكنى والألقاب எனும் கிதாபு :இந்த கிதாபும் முன்னையதைப் போன்றதாகும். الكنى والأسماء என்றே இந்த கிதாபு அச்சிடப்பட்டுள்ளது.

3) இமாம் தஹபீ உடைய ميزان الاعتدال எனும் கிதாபு :குறை கூறப்பட்ட அறிவிப்பாளர்களின் பட்டியல் அடங்கிய புத்தகம். குறை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவோ அல்லது மறுக்கப்பட்டதாகவோ இருக்கலாம்.

4) இமாம் இப்னு ஹஜர் உடைய لسان الميزان எனும் கிதாபு :இமாம் தஹபீ உடைய ميزان الاعتدال இல் உள்ள, ஆறு கிரந்தங்களின் அறிவிப்பாளர்களை விடுத்து ஏனையவர்களின் தகவல்கள்
ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதோடு, இமாம் தஹபீக்கு விடுபட்டவைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

5) இமாம் ஹாரிஸ் இப்னு அபீஉஸாமா உடைய முஸ்னத் எனும் கிதாபு :”முஸ்னத்” என்ற பெயரில் உள்ள கிதாபுகளில் ஒவ்வொரு ஸஹாபாக்களும் அறிவித்த ஹதீஸ்கள் அவரவர் பெயரில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன.

6) இமாம் இப்னுல் கையிம் உடைய அல்மனாருல் முனீப் எனும் கிதாபு : அதாரபூர்வமற்ற செய்திகளை இணங்கானும் வழிமுறைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

தொடரும் இன்ஷா அல்லாஹ்…

——————————————————————

வாசக நண்பர்களே!!!

இந்திய அன்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் سلسلة الأحاديث الضعيفة والموضوعة எனும் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் அடங்கிய தொகுப்பை தமிழில் மொழி பெயர்க்க விழைந்துள்ளேன்.

இதில் உளத்தூய்மையையும் நற்கூலியையும் வழங்குமாறு இறைவனிடம் இறைஞ்சுவதோடு, இதனை சரிபார்ப்பதோடு, ஏதாவது தவறுகள் காணப்படும் பட்சத்தில் திருத்தித் தந்துதவுமாறு அறிஞர் பெருமக்களிடம் பணிவாய் வேண்டிக்கொள்கிறேன்.

-ஷுஐப் உமரி

Check Also

இமாம் அஹ்மதின் “முஸ்னத்” பற்றிய சுருக்கமான பார்வை…

(ஹதீஸ் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு) உங்களது தந்தை (இமாமுஸ் ஸுன்னா இமாமுனா அஹ்மத்) அவர்கள் பத்து இலட்சம் ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்கள் …

One comment

  1. Please translate thableesu unless by ibnu qayum

Leave a Reply