• மீனுடையவர் எனக் கூறப்பட்டவர் யார்?
மீனுடையவர் எனக் கூறப்பட்டவர் யூனுஸ் பின் முத்தா (துன்னூன்).
யூனுஸ் (அலை) அவர்களை அல்லாஹ் பக்தாதிலுள்ள ~நய்னவா| என்ற கிராமத்துக்குத் தூதராக அனுப்பினான். அவர் அங்கு வாழ்ந்த மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பு விடுத்து, அவனுக்கு மாறுசெய்வதன் மூலம் கடுமையான வேதனையுண்டு எனவும் எச்சரிக்கை செய்தார். எனினும் அம்மக்கள் அவர்களின் கட்டளையை நிராகரித்து, மாறுசெய்த பொழுது, கோபமுற்றவராக அல்லாஹ்வின் அனுமதியின்றி அவ்வூரை விட்டு புறப்பட்டு கடற்கரைப் பக்கமாக சென்றார். இவ்வாறு செய்வதன் மூலம் அல்லாஹ் தண்டிக்கமாட்டான் என்றெண்ணி பயணத்தை மேற்கொண்டார். ஆனால், அவரது சமுதாயம் அவர் அவ்வூரை விட்டு வெளியேறிய பின் விசுவாசம் கொண்டனர். இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்:
((கடைசி நேரத்தில்) நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை பயன் அளித்த யூனுஸ் சமுதாயம் தவிர வேறு ஊர்கள்; இருக்கக்கூடாதா? அவர்கள் நம்பிக்கை கொண்ட போது இவ்வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களை விட்டும் நீக்கினோம். அவர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை வசதி வழங்கினோம்.) யூனுஸ் – 98.
கடற்கரைப் பக்கம் சென்ற அவர் கடலில் பொதிகளையும், பயணிகளையும் ஏற்றிச் செல்லும் கப்பலை நிறுத்தி, அதில் ஏறிச் சென்றார்.
அல்லாஹ் கூறுகிறான்:
(நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடினார்) அஸ் ஸாஃப்பாத் -140.
கடல் அலை மிகக் கடுமையாக இருந்தது. அதனால் கடலில் முழ்கிவிடக் கூடும் என மக்கள் பயந்து தங்களிடம் இருந்த பொதிகளை ஒன்றன் பின் ஒன்றாக கடலில் போட்டார்கள். ஆனால், அவர்களின் நோக்கம் நிறைவேரவில்லை. இறுதியாக பயணிகளில் சிலரைக் குறைத்து பலரைப் பாதுகாக்கலாம் என முடிவுக்கு வந்தார்கள். ஆனால், இக்காரியத்துக்கு யார் முன்வருவது என்ற சரிச்சை அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்டது. பின், சீட்டு; போட்டு தெரிவு செய்தபோது யூனுஸ் (அலை) அவர்களின் பெயர் வந்தது. இதை பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்:
(அவர்கள் சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகிவிட்டார்.)
அஸ் ஸாஃப்பாத் – 141.
பின்பு யூனுஸ் (அலை) அவர்கள் கடலில் பாய்ந்தார்கள். அல்லாஹ்வின் நாட்டப்படி பெரிய மீன் ஒன்று அவர்களை விழுங்கி கடலின் ஆழத்துக்கு எடுத்துச் சென்றது. இக்கட்டத்தில் யூனுஸ் (அலை) அவர்கள் பலவிதமான இருள்களைச் சந்திக்க நேர்ந்தது. தனது கூட்டத்தாரை விட்டு கோபத்துடன் வந்த கவலை ஒரு பக்கமிருக்க, மீனுடைய வயிற்றுக்குள் ஒரு இருள், கடலின் ஆழம் மற்றொரு இருள், இரவின் இருள் இவ்வாறு இக்கட்டான சூழலில் இருந்த அவர்கள் முதலில் அல்லாஹ்வைத் தான் அழைத்தார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
(மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் எனறு நினைத்தார். ‘உன்னைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகிவிட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.) அல் அன்பியா – 87.
அல்லாஹ்வை துதி செய்ய ஆரம்பித்த போது, அல்லாஹ் அவரது துயரத்தைப் போக்கினான்.
அல்லாஹ் கூறுகிறான்:
(அவர் (நம்மை) துதிக்காது இருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்) அஸ் ஸாஃப்பாத் – 143:144.
பின்பு மீன் அவரை கரையில் கொண்டு வந்து போட்டது. அப்போது அவர் நோயுற்றவராக போடப்பட்டாரே தவிர இழிவாக போடப்படவில்லை.
அல்லாஹ் கூறுகிறான்:
(அவரை நோயுற்றவராக வெட்டவெளியில் எறிந்தோம்) அஸ் ஸாஃப்பாத் -145.
இது அல்லாஹ் அவர் மீது புரிந்த அருளாகும். அதைத் தான் அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான்:
(அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார்.) அல் கலம்- 49.
அத்துடன் அல்லாஹ் முடித்துக்கொள்ளவில்லை. மாறாக குளிரில் கிடந்து வந்த மனிதனுக்கு சூடு வழங்க வேண்டுமென்பதற்காக ~யக்தீன~; என்ற மரத்தை முளைக்கச் செய்தான். அது அவருக்கு நிழல் கொடுத்து, மறைத்து வைத்து, சூட்டை வழங்கியது. இதைத் தான் அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்:
(அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக்கொடியை முளைக்கச் செய்தோம்.)
அஸ் ஸாஃப்பாத் – 146.
மீண்டும் அல்லாஹ் அவர்களை அழைப்பு விடுவதற்குத் தேர்ந்தெடுக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான்:
(அவரை ஒரு லட்சம் அல்லது (அதைவிட) அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம்.) அஸ் ஸாஃப்பாத் – 147.
(அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமதானமும் உண்டாவதாக!)
இச்சம்பவம் மூலம் உண்மையுள்ள விசுவாசி பல படிப்பினைகளைப் பெற வேண்டும்.
1. அல்லாஹ்வின் அருளை விட்டும் நம்பிக்கை இழக்காதிருத்தல்.
2. நிச்சயமாக அல்லாஹ் தௌபாவை ஏற்றுக் கொள்பவன். யூனுஸ் (அலை) அவர்கள் பாவமன்னிப்புத் தேடினார்கள் அல்லாஹ் அவர்களை மன்னித்தான்.
3. சங்கடத்தில் மாட்டிக் கொண்டவருக்கு உதவி செய்வதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
அல்லாஹ் கூறுகிறான்:
(நெருக்கடியைச் சந்தித்தவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்) அந்நம்ல் – 62.
4. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் யூனுஸ் (அலை) அவர்கள் மூலம் நேர்வழி அடைந்தார்கள் என்ற செய்தி இவரின் உயர் அந்தஸ்தைக் காட்டுகிறது.
5. மனிதர்கள் எவ்வளவு பெரிய அந்தஸ்துடையவர்களாக இருந்தாலும் அவர்கள் அல்லாஹ்வின் அடியார்களே! எனவே அவர்களில் அவன் நாடியவர்களைத் தண்டிப்பான். அவர் நபியாக இருப்பினும் சரியே!
யாவற்றையும் நன்கறிந்தவன் மாபெரும் கிருபையாளன் அல்லாஹ் ஒருவனே!