Home / கட்டுரை / கட்டுரைகள் / மழை காலங்களில் ஜம்மு (சேர்த்து) தொழுதல் பற்றிய விளக்கம் | கட்டுரை

மழை காலங்களில் ஜம்மு (சேர்த்து) தொழுதல் பற்றிய விளக்கம் | கட்டுரை

மழை காலங்களில் ஜம்மு (சேர்த்து) தொழுதல் பற்றிய விளக்கம்

“ அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் புறப்படுவதாக
இருந்தால் மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி, மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவார்கள். முஸ்லிம்1263

“ அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன் பயணம் மேற்கொண்டால் லுஹர் தொழுகையை அஸர் நேரம்வரைத் தாமதப்படுத்தி, பின்பு (ஓரிடத்தில்) இறங்கி லுஹரையும் அஸ்ரையும் சேர்த்துத் தொழுவார்கள். பயணம் புறப்படுவதற்கு முன் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்து விட்டால் லுஹர் தொழுதுவிட்டே பயணம் மேற்கொள்வார்கள்.
முஸ்லிம் 1264

“ அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்துத் தொழ விரும்பினால், லுஹர் தொழுகையை அஸ்ரின் ஆரம்ப நேரம் வரும்வரைத் தாமதப்படுத்துவார்கள்; பிறகு லுஹரையும் அஸ்ரையும்சேர்த்துத்தொழுவார்கள். முஸ்லிம் 1265

ஜம்மு செய்வதற்கு இந்த நான்கு வக்து தொழுகைகளை உரிய நேரத்தில் முறையாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும். கஸா் செய்ய வேண்டிய குறிப்பிட்ட எல்லையை தாண்டி விட்டால், சுருக்கியும், சோ்த்தும் தாராளமாக தொழலாம்.

ஊரில் ஜம்மு ( சேர்த்து ) தொழுதல்

பொதுவாக ஜம்மு செய்வதற்கு முன்று காரணங்கள் உள்ளன. முதலாவது பிரயாணம், இரண்டாவது மழை, மூன்றாவது பயம், இந்த முன்று காரணங்களுக்காக ஜம்மு (சேர்த்து) தொழலாம். அதே நேரம் இந்த முன்று காரணங்கள் இல்லாமல் ஊரிலே இருக்கும் போது நபியவர்கள் ஜம்மு செய்துள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுப் படுத்வதை காணலாம்.

“ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள்; அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ பயணத்திலோ அவர்கள் இருக்கவில்லை. முஸ்லிம் 1267

ஊரிலே இருக்கும் போது எந்த காரணமுமின்றி தொழுகைகளை சேர்த்து நபியவா்கள் தொழுதுள்ளார்கள். ஏன் நபியவர்கள் இப்படி செய்தார்கள் என்பதை பின் வரும்செய்திகள் மூலம் அவதானிக்கலாம்.

“ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்;மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தார்கள்)” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோக்கத்தில் இவ்வாறு செய்தார்கள்?” என்று கேட்கப்பட்டதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருதினார்கள்” என விடையளித்ததாக இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம் 1272

ஊரில் இருக்கம் போது ஓரு தொழுகையை மற்றொரு தொழுகையுடன் சேர்த்து நபியவர்கள் தொழுதது, இந்த சமுதாயத்திற்கு சிரமம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான் என்பதை அறிந்து கொண்டோம்.

இப்போது ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது மஃரிபுக்கு ஒரு நேரம், பிறகு இஷாவிற்கு ஒரு நேரம் என்று நேரத்தை ஒதுக்கினால் நிகழ்ச்சியை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாது. மஃரிபுடன் இஷாவையும் சேர்த்து தொழுது விட்டால், அனைவருக்கும் இது இலகுவாக அமைந்து விடும்.

அதுமட்டுமல்ல நிகழ்ச்சி முடிந்து களைப்போடு வீட்டிற்கு சென்று இஷாவை தொழாமலே உறங்கி விடுவார்கள்.

இப்படி பொருத்தமான நேரங்களில் தேவையைக் கருதி சேர்த்து தொழுதுக் கொள்ளலாம்.

மழைக் காலங்களில் ஜம்மு செய்தல்

தொடா் மழை, அடை மழை, காலங்களில் தனது வீட்டிலே தொழுது கொள்ளும் படி நபியவர்கள் சொன்ன செய்தியை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் நாம் அறியலாம்.

“ நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். அப்போது “அலா ஸல்லூ ஃபிர்ரிஹால்” (ஒரு முக்கிய அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்) என்றும் அறிவிப்புச் செய்தார்கள். பிறகு “(கடுங்)குளிரும் மழையும் உள்ள இரவில் “ஒரு முக்கிய அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்” என்று அறிவிக்குமாறு தொழுகை அறிவிப்பாளரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் 1240

மேலும் “ ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்த போது மழை பெய்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் யார் விரும்புகிறாரோ அவர் தமது இருப்பிடத்திலேயே தொழுதுகொள்ளட்டும்!” என்று கூறினார்கள். முஸ்லிம் 1243

மேலும் “ அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மழை பெய்துகொண்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்பாளரிடம், அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்… அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று கூறியதும் “ஹய்ய அலஸ் ஸலாஹ்” (தொழுகைக்கு வாருங்கள்) என்று கூறாமல், “ஸல்லூ ஃபீ புயூத்திக்கும்” (உங்கள் இல்லங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்) என்று கூறுவீராக!” என்றார்கள். இ(வ்வாறு அவர்கள் கூறிய)தை மக்கள் ஆட்சேபிப்பதைப் போன்றிருந்தது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “இ(வ்வாறு நான் கூறிய)தைக் கேட்டு நீங்கள் வியப்படைகிறீர்களா? என்னை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இவ்வாறு தான் செய்தார்கள். ஜுமுஆ(த் தொழுகை) கட்டாயக் கடமையாகும் (அத்தொழுகைக்கு வாருங்கள் என்று கூறப்பட்டுவிட்டால் சிரமத்தோடு நீங்கள் வரவேண்டியதாகிவிடும்). நான் உங்களைச் சேற்றிலும் சகதியிலும் நடக்க விட்டு உங்களுக்குச் சிரமம் கொடுக்க விரும்பவில்லை (எனவேதான், இல்லங்களிலேயே தொழச் சொன்னேன்)” என்று கூறினார்கள். முஸ்லிம் 1244

மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் இரண்டு விடயங்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.
அதாவது தொழுகை நேரத்தின் போது கடுமையான மழை பெய்து கொண்டிருக்கிறது என்றால், மழையில் நனைந்துக் கொண்டும், சேற்றில் மிதித்துக்கொண்டும்பள்ளிக்கு வரத் தேவை இல்லை வீட்டிலே தொழுது கொள்ள முடியும்.

அடுத்ததாக பள்ளியில் மஃரிபை தொழுது முடிந்தவுடன் மழை பெய்கிறது என்றால் அப்போது இஷாவை முற்படுத்தி மஃரிப் வக்திலே சோ்த்து தொழுது விட்டு வீட்டுக்கு போகலாம், என்பதை தான் மேற்ச் சென்ற ஹதீஸ்கள் நமக்கு பாடம் சொல்லித் தருகிறது.

எனவே மேற்ச் சென்ற அனைத்து செய்திகள் மூலம் கஸா், ஜம்வு, அதனுடைய தூர எல்லைகள், எப்ப, எப்ப, கஸா், மற்றும் ஜம்வு செய்யலாம்.என்பதை படித்துக் கொண்டீா்கள அல்ஹம்து லில்லாஹ்.

“அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (33 -21)

Check Also

எழுச்சிக் கொண்ட சமூகம் : கல்வி-தாக்கம்-மாற்றம்

மீள் பதிவு: கல்வி ➡ தாக்கம் ➡ மாற்றம் ————————————————————– நாம் சீரான கல்வியைப்  பெற்று, தாக்கமும் அடைந்து, அறிவு …

Leave a Reply