Home / கட்டுரை / கட்டுரைகள் / இஸ்லாத்தின் பார்வையில் நிய்யத்தும் அதன் சரியான இடமும்…

இஸ்லாத்தின் பார்வையில் நிய்யத்தும் அதன் சரியான இடமும்…

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி

நாம் நாள் தோறும் பல்வேறு விதமான செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம். அவைகளில் சில நேரங்களை வணக்க வழிபாடுகளுக்காக ஒதுக்கிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் சில நேரங்களை உலகக் காரியங்களுடன் தொடர்புடையவைகளாக ஆக்கியிருக்கின்றோம். இந்தடிப்படையில் நாம் செய்கின்ற வணக்கங்களுடன் சம்பந்தப்பட்ட காரியங்களையும் பிரித்துக் காட்டுவது இந்த நிய்யதாகும்.

நாம் செய்கின்ற வணக்கங்கள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதாக இருந்தால் நிய்யத் மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

“செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே அமைகின்றன…”
(புஹாரி முஸ்லிம்)

எனவே இக்கட்டுரையின் மூலமாக நிய்யத் என்றால் என்ன? அதனுடைய சரியான இடம் என்ன? சமூகத்தில் இது விடயத்தில் காணப்படுகின்ற பித்அத்கள் என்ன? என்பதை தெளிவுபடுத்தலாமென நினைக்கிறேன்.

நிய்யத் என்றால் என்ன ?

மொழி ரீதியாக நிய்யத்( نية ) என்ற சொல் நவா ( نوى ) என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். நவா என்றால் எண்ணினான் என்பது பொருளாகும். நிய்யத் என்றால் நாடுதல் என்பது பொருளாகும்.
(பதாயிஉஸ் ஸனாயிஃ 1/127 ) (ஜாமிஉல் உலூம் வல்ஹுகும் பக்கம் 15)

மார்க்க ரீதியாக நிய்யத் என்பதன் விளக்கத்தை இமாம்கள் பின்வருமாறு தெளிவு படுத்துகின்றார்கள்.

இமாம் இப்னு ஆப்தீன் என்பவர் சொல்லும் போது,

“நிய்யத் என்றால் ஒரு செயலை செய்கின்ற போது அதன் மூலம் அல்லாஹ்வை நெருங்குவதாகவும் கட்டுப்படுவதாகவும் நாடுதல்.

(ஹாஷியா : 1/105)

இமாம் நவவி றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள்

“நிய்யத் என்றால் ஒரு பர்ளையோ அல்லது ஏதாவது ஒன்றை செய்யும் போது உள்ளத்தினால் உறுதி கொள்வதாகும்.

(அல் மஜ்மூஃ 1/353)

இப்படி ஒவ்வொரு இமாம்களும் விளக்கம் சொல்லியிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட இந்த விளக்கங்கள் யாவும் உணர்த்துகின்ற பொருள் உள்ளத்தினால் நாடுவதாகும்.

நிய்யத்தினுடைய இடம் என்ன ?

இன்று சமூகத்தில் இருக்கின்ற மார்க்க சட்டதிட்டத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் ஒன்றுதான் நிய்யத்தினுடைய சரியான இடம் எதுவென்பது பற்றியாகும். அதிகமான உலமாக்கள் சொல்லக் கூடிய விளக்கம் நிய்யத்தினுடைய சரியான இடம் உள்ளமாகும்.

(அல் பதாவா அல் குப்ரா 2/95)

(அதபுத் துன்யா வத்தீன்- பக்கம் 18)

இந்த வாதத்தினை முன்வைப்பவர்கள் அல்குர்ஆனில் உள்ளத்துடன் சம்பந்தப்பட்டு வருகின்ற (7:179)(6:25)(22:46) ஆகிய வசனங்களை ஆதாரமாக காட்டுவதுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஸூன்னாவிலிருந்தும் “உடலில் ஒரு சதைப் பகுதி இருக்கிறது. அது சீராகினால் உடல் முழுதும் சீராகி விடும் அது கெட்டு விட்டால் உடல் முழுதும் கெட்டுவிடும் அதுதான் உள்ளமாகும். (புஹாரி :52) (முஸ்லிம் :1599)
என்ற ஹதீஸினைக் கூறுகின்றார்கள். இந்தடிப்படையில் எல்லா நடவடிக்கைகளையும் தீர்மானிப்பது உள்ளமாகத்தான் இருக்கின்றது. எனவே நிய்யத்தினுடைய சரியான இடம் உள்ளமாகும் எனக் கூறுகின்றனர்.

இன்னும் சில இமாம்கள் நிய்யத்தினுடைய இடமாக தலைக்கும் உள்ளத்திற்கும் இடைப்பட்ட பகுதி எனக் கூறுவதன் மூலம் வாயினால் மொழிவதை சூசகமாகக் கூறுகின்றார்கள்.

(தப்யீனுல் ஹகாயிக் 4/32)

(அல் பஹ்ருல் முஹீத் 1/122)

என்றாலும் இவர்களுடைய வாதம் ஏற்றுக் கொள்ள முடியாததாகக் காணப்படுகின்றது. எனவே நிய்யத்தினுடைய சரியான இடம் உள்ளமாகும்.

நிய்யத்தை வெளிப்படையாக மொழிவதன் சட்டம்:

நிய்யத்தினுடைய சரியான இடம் உள்ளம் என்பதில் அதிகமான உலமாக்கள் ஏகோபித்திருந்தாலும் வாயினால் மொழிவதன் சட்டத்தில் சிலர் கருத்து வேறுபாடு கொள்கின்றனர்.

சில உலமாக்கள் வாயினால் மொழிவதென்பது மார்க்கம் சொல்லித் தராத விடயமாகும் என்று கூறுகின்றனர். இப்படியே இமாம் இப்னு தைமியா ரஹிமகுல்லாஹ் அவர்கள் அல் பதாவா அல் குப்ரா (1/214) என்ற நூலிலும் அல் புரூஃ (1/139) என்ற நூலிலும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இப்படி மார்க்கம் சொல்லித் தராத காரியம் என்று சொல்லக்கூடிய உலமாக்களில் சிலர் ஹஜ்ஜுடைய நேரத்தை மாத்திரம் அதிலிருந்து விதிவிலக்களிக்கின்றார்கள். இதல்லாத மற்றைய வணக்கங்களுக்கான நிய்யத்தை வாயினால் மொழிவதை பித்அத் என்று சொல்கின்றனர்.

(அல் இக்னா 1/24)

இவ்வாறு ஹஜ்ஜினுடைய நிய்யத் விடயத்தில் விளக்கம் சொல்லக்கூடிய உலமாக்கள் அதனை இரகசியமாக செய்வதே விரும்பத்தக்கது என்றும் கூறியிருக்கின்றார்கள். இது முதலாவது சாராரது வாதமாகும்.

இன்னும் சில உலமாக்கள் எல்லா அமல்களது நிய்யத்தையும் வாயினால் மொழிவது விரும்பத்தக்க காரியம் என்கின்றனர். இவ்வாறு சொல்லக்கூடியவர்கள் யாரென்றால் இமாம் அபூ ஹனிபா றஹிமஹுல்லாஹு அவர்களைப் பின்பற்றக்கூடியவர்களும் (ஹாஷியா 1/108)
இமாம் ஷாபிஃ றஹிமஹுல்லாஹ் அவர்களை பின்பற்றுபவர்களுமே(மஜ்மூஃ 6/302)

இந்தக் கருத்தினை சொல்லக்கூடிய இந்த இரண்டு சாராரும் வாயினால்தான் மொழிய வேண்டும் என்று கூறவில்லை. மாற்றமாக வாயினால் மொழிவது விரும்பத்தக்கதே என்று கூறியிருப்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

▪இந்த இரண்டு சாராரும் வைக்கக்கூடிய ஆதாரங்கள்.

இரண்டாவது சாராரான நிய்யத்தை வாயினால் மொழிவது விரும்பத்தக்கது எனக்கூறக் கூடியவர்கள் ஹஜ் உம்ராவின் போது தல்பியாக்களை வெளிப்படையாக சொல்கின்றீர்களே எனவே நிய்யத்தை வாயினால் மொழிவதும் விரும்பத்தக்கதாகும் எனக் கூறுகின்றனர்.

உண்மையில் தல்பியா என்பது வேறு நிய்யத் என்பது வேறு. இவ்விரண்டுக்குமிடையே எந்தத் தொடர்பும் கிடையாது. நிய்யத் என்பது ஒன்றை செய்வதற்கு முன் அந்தக் காரியத்தை அந்தக் காரியத்தை செய்யப் போகின்றேன் என உள்ளத்தால் எண்ணுவதைக் குறிக்கின்றது. தல்பியா என்பதன் பொருள் பதிலளித்தல் என்பதாகும். அல்லாஹ் ஹஜ் உம்ராவை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டிருக்கிறான். எனவே ஹஜ் உம்ராவை நிறைவேற்ற அந்த இடங்களுக்கு வந்து அல்லாஹ்வுடைய கட்டளைக்கு பதிலளித்துவிட்டேன் என்று கூறுவது தல்பியாவாகும். எனவே தல்பியா என்பது ஒரு செய்யுகின்ற போது கூறுவது. நிய்யத் என்பது ஒரு செயலை செய்வதற்கு முன் எண்ணுவதைக் குறிக்கின்றது.

எனவே யாரெல்லாம் ஹஜ் உம்ராவை நிய்யத்தினுடைய விடயத்துக்கு ஆதாரம் காட்டுகின்றார்களோ அவர்களது வாதம் ஏற்றுக் கொள்ள முடியாததாகக் காணப்படுகின்றது.

முதலாவது சாராரான நிய்யத்தை வாயினால் மொழிவது மார்க்கம் சொல்லித் தராத காரியமென கூறுவோர் சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.
அவற்றில்,

இமாம் இப்னு பாஸ் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள்

“நிய்யத்தை வாயினால் மொழிவது பித்அத்தாகும். அதே போன்று அதனை வெளிப்படையாக செய்வது பாவங்களில் மிகக் கடுமையானதாகும். நிய்யத்தின் சரியான இடம் உள்ளமாகும். ஏனெனில் அல்லாஹ் இரகசியங்களையும் மறைவானவற்றையும் அறியக் கூடியவனாக இருக்கிறான். அல்லாஹ் அல்குர்ஆனில்,
“உங்களது மார்க்கத்தை நீங்கள் அல்லாஹ்வுக்கு அறிவிக்கின்றீர்களா? என்று நபியே நீர் கேட்பீராக. அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் நன்கு அறிவான்”(49:16)

அதே போன்று நபியவர்களைத் தொட்டோ அல்லது ஸஹாபாக்கள் அவர்களைப் பின்தொடர்ந்து வந்த இமாம்களைத் தொட்டோ எந்த செய்தியும் (வாயினால் மொழிவதைப் பற்றி) உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே இதன் மூலம் அறியக்கூடிய விடயம் நிய்யத்தை மொழிவது மார்க்கமல்லாத பித்அத்தான காரியமாகும்.

(பதாவா அல் இஸ்லாமிய்யா 2/315)

இந்தடிப்படையில் எமக்கு இது தொடர்பாக தெளிவாக தெரியக்கூடிய விடயம் நிய்யத்தினுடைய சரியான இடம் உள்ளமாகும். அதனை வாயினால் மொழிவது பித்அத்தாகும். பித்அத்தினுடைய முடிவு நரகமாகும். எனவே இந்த விடயத்தில் சரியான முறையை பின்பற்ற அல்லாஹ்வுத்தஆலா அருள்புரிவானாக.

Check Also

எழுச்சிக் கொண்ட சமூகம் : கல்வி-தாக்கம்-மாற்றம்

மீள் பதிவு: கல்வி ➡ தாக்கம் ➡ மாற்றம் ————————————————————– நாம் சீரான கல்வியைப்  பெற்று, தாக்கமும் அடைந்து, அறிவு …

Leave a Reply